(3) மனுஷ்யத்தன்மை ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் (Bushmen) - எல்லாரும் பொதுவில் 'மனிதர், 'ஆதாம் ஏவா வழியில் பிறந்தவர்கள்' என்று கூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் 'மனிதர் எல்லோரும் ஒன்று' என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரதத்தில் மனிதர், தேவர், புட்கள், பாம்புகள் எல்லோருமே காச்யப ப்ரஜாபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வேதாந்த சாஸ்த்ரமோ பிராமணர், நாயர், முதலை, கரடி, வெங்காயப்பூண்டு முதலிய ஸகல ஜீவன்களும் பரமாத்மாவின் அம்சங்களே யன்றி வேறல்ல என்று பல "நூற்றாண்டுகளாகப் பறையறைந்து கொண்டு வருகிறது. ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ண பேதங்களைக் கவனிக்கக் கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனி பெஸண்ட் முதலியவர்கள் சொல்லுவதை இந்த நாட்டில் எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும் மறுக்க மாட்டார்களென்று நம்புகிறேன். கிராமப் பள்ளிக்கூடங்கள் அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். 'கான்பரென்ஸ்' என்றும், 'மீட்டிங்' என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒரு வழி பிறக்கவில்லையே! ஏன்? எதனாலே? காரணந்தான் என்ன? ஜாதி என்ற சொல் இரண்டு அர்த்தமுடையது. முதலாவது, ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளும் பிரிவு; வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோளஜாதி என்பது போல. இரண்டாவது, தேசப் பிரிவுகளைத் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பாரஸிக ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பதுபோல. இவ்விரண்டிலும் அதிக அநுகூல மில்லையென்பது ஸ்ரீமான் ரவீந்திரநாத தாகூருடைய கக்ஷி. அமெரிக்காவிலே பிறந்தவன் தான் அமெரிக்க ஜாதியென்றும் ஆங்கில சாதியில்லை என்றும் நினைத்துக் கொள்கிறான். இங்கிலாந்திலுள்ள ஆங்கிலேயனுக்கும் குடியரசுத்தலைவர் வில்ஸனுக்கும் நடை, உடை, ஆசாரம், மதம், பாஷை எதிலும் வேற்றுமை கிடையாது ஆனால், தேசத்தை யொட்டி வேறு ஜாதி 'நேஷன்'. இந்த தேச ஜாதிப் பிரிவு மேற்குப் பக்கத்தாரால் ஒரு தெய்வம்போல் ஆதரிக்கப் படுகிறது. அங்கு, யுத்தங்களுக்கு இக்கொள்கை ஒரு முக்கிய காரணம். எல்லா தேசத்தாரும் சகோதரர் என்றும், மனுஷ்ய ஜாதி முழுதும் ஒன்றே யென்றும். ஆதலால் தேச வேற்றுமை காரணமாக ஒருவரை ஒருவர் அவமதிப்பதும் அழிக்க முயல்வதும் பிழையென்றும் ஸ்ரீீ தாகூர் சொல்கிறார். |