பக்கம் எண் :

சமூகம் - தேசீயக் கல்வி (2)

காள யுக்தி

காளயுக்தி என்பது கால யுக்தி; அதாவது, காலத்தின்பொருத்தம்; காலம் இந்த வருஷத்தின் ஆரம்பத்தில் எந்தப்பெருஞ் செயல்களுக்கும் மிகவும் பொருத்தமாகச் சமைந்திருக்கிறது.

தேசீயக் கல்வி, மனுஷ்ய ஜாதியின் விடுதலை,இவ்விரண்டும் பெருங்காரியங்களைத் தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக்கிறது.

இவற்றுள் மனுஷ்ய ஜாதியின் விடுதலை நிறைவேற வேண்டுமாயின் அதற்கு பாரத தேசத்தில் விடுதலை இன்றியமையாதமூலாதாரமாகும்.

இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின்அதற்கு தேசீயக் கல்வியே ஆதாரம்.

"அ......................................................................ன்"

மேலே காட்டிய குறியின் பொருள் யாது?

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாவ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பதுபொருள்.

ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும்.பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; "ஸ்லேட்""பென்சில்" என்று சொல்லக் கூடாது.