பக்கம் எண் :

சமூகம் - நாற்குலம்

சாதுர்வர்ணயம்

சென்ற 'காங்கிரஸ்' ஜனஸபை 'லக்நௌ' நகரத்தில்கூடிக் கலைந்த பிறகு, ஸ்ரீீமான் லோகமான்ய பாலகங்காதரதிலகர் தமது இஷ்டர்களுடன் கான்பூருக்கு வந்தார். அங்குராமலீலை நாடக வெளியில் பதினையாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக்கூட்டம் ஒன்றுகூடி அவரை ஸ்வராஜ்ய போதனை செய்யும்படி வேண்டினார்கள். ஸ்வராஜ்ய பேச்சுக்கிடையே அவர் ஜாதிக்கட்டை குறித்துச் சொல்லிய சில வார்த்தைகளை இங்கு மொழிபெயர்த்துக் காட்டுகிறேன்.

திலகர் சொன்னார்:- "பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக, இப்போது ஒரே பந்தியில்இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லக்ஷணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை.

''நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல, குலத்தாலும் தொழிலாலும் உண்டாயின'' என்று கீதை சொல்லுகிறது. அதன்படி பார்த்தால் இப்போது நமக்குள் க்ஷத்திரியர்எங்கே இருக்கிறார்கள்?நம்மைக் காப்போர் ஆங்கிலேயர்கள்;ஹிந்துக்களுள் க்ஷத்திரியரைக் காணோம். இந்தக் கான்பூர் பெரிய வியாபார ஸ்தலம். ஆனால், இங்குள்ள வைசியர் பிற தேசத்து வியாபாரிகளின் வசத்தில் நிற்கிறார்கள். செல்வத் தலைமை நமக்கில்லை. இப்போதுள்ள பிராமணர் தாமேதேசத்தின் மூளையென்று சொல்லுகிறார்கள். ஆனால், இந்த மூளை மண்ணடைந்துபோய், நாம் வெளியிலிருந்து அதிக மூளை இறக்குமதி செய்யும்படி நேரிட்டிருக்கிறது.

"நான்கு வர்ணத்தாருக்குரிய நால்வகைத் தொழில்களும் ஹிந்துக்களல்லாத பிறர்நியமனப்படி நடக்கின்றன. நாமெல்லோரும் தொண்டர் நிலையிலே இருக்கிறோம்.தேசம் கெட்ட ஸ்திதியிலே இருக்கிறது. உங்களுடம்பில் பிராமணரத்தம் ஓடுவதாகவும் க்ஷத்திரிய ரத்தம் ஓடுவதாகவும் நீங்கள் வாயினால் சொல்லலாம். ஆனால், உங்களுடைய வாழ்க்கை அப்படி இல்லை."