பக்கம் எண் :

சமூகம் - ஜாதிபேத விநோதங்கள்

இந்தியாவின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் நமதுசென்னை மாகாணத்தில் தான் ஜாதிபேதத்தைப் பற்றிய மனஸ்தாபங்கள் இப்போது அதிகமாக முளைத்திருக்கின்றனவென்பதுஅந்த மனஸ்தாபங்கள் ராஜரீக விவகாரங்களிலுங்கூடப் புகுந்துதேச விடுதலையாகிய பரம தர்மத்துக்கே ஓர் இடுக்கணாகக் கூடிய நிலைமை இம்மாகாணத்தில் மாத்திரமே காணப்படுவதினின்றும் நன்கு விளங்கும். ஆயினும், இது பற்றிசுதேசாபிமானிகள் அதிகமாகப் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், முதலாவது உலக முழுவதிலும் புதிதாகத் தோன்றிச்சென்ற சில வருஷங்களாகப் புயற்காற்றைப் போல் தொழில் செய்துவரும் தெய்விகமான விடுதலைக் கிளர்ச்சியின் சக்தியால்இந்தியாவின் மக்கள் முப்பது கோடிப் பேரும் எங்களுக்கு ஸ்வராஜ்யம் வேண்டியதில்லை யென்று ஹடம் பண்ணிய போதிலும் இந்தியாவுக்குக் கட்டாயமாக ஸ்வராஜ்யம் வந்து தீரவே செய்யும். மனிதர் எண்ணத்தை மீறியும் கால சக்திவேலை செய்வதுண்டு. அப்படிப்பட்ட காலம் இப்போது உலகமெங்கும் தோன்றியிருக்கிறது. மேலும் இந்த சமயத்தில் இந்தியாவிலும் ஜனங்களிற் பெரும்பகுதி ஸ்வராஜ்ய தாகத்தில் ஈடுபட்டுத் தான் கிடக்கிறார்கள். எனவே, எந்த வகையாய் யோசித்த போதிலும், இந்தச் சென்னை மாகாணத்து ஜாதிபேதக்கிளர்ச்சியினால் இந்தியாவின் விடுதலைக்குத் தாமஸம் ஏற்படுமென்று நினைக்க ஹேது இல்லை.

தவிரவும், இந்த ''பிராமணரல்லாதார் கிளர்ச்சி '' காலகதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும்போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது, இதில் உண்மையில்லை, உண்மையாகவே இந்தியாவில் ஜாதிபேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற ஐக்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும் ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலிய வற்றில்கௌரவ ஸ்தானங்களையும் தாமே அடையவேண்டு மென்றஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலைசெய்து வருகிறார்கள். திருஷ்டாந்தமாக, பிராமணருக்கு அநேகமாக அடுத்தபடி தென் இந்தியாவில் பல இடங்களிலேசைவ வேளாளர் என்ற வகுப்பினருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்குக் கீழே பஞ்சமர் வரை சுமார் இரண்டாயிரம்சாதி வகுப்புக்களிருக்கின்றன. அவர்களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பினரே இருக்கிறார்கள். இந்த நிலையில்நம்முடைய சைவ வேளாளருள்ளே ''அல்லாதார்'' கிளர்ச்சியைச்சேர்ந்திருப்பவருங் கூடத் தமக்கு மேற்படியிலுள்ள பிராமணர்பிரிவுக் குணமுடையோரென்றும், மற்ற வகுப்பினருடன் "சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழ மறுக்கிறாரென்று நிந்திக்கிறார்களேயல்லாது, தமக்குக் கீழேயுள்ள இரண்டாயிரத்துச் சில்லரை ஜாதியர்களுடனும் தாம் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழுமாறுயாதொரு பிரயத்தனமும் செய்யாதிருக்கிறார்கள். ''பிராமண ரல்லாதார்'' என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது.ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்துகொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது. எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப்போலவே இந்த முறைமையால் பந்தப்பட்டிருக்கிறார்கள். பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம், சம்பந்தம்.சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன.