பக்கம் எண் :

சமூகம் - பிராமணன் யார்?

'பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்குவர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன்என்று வேத வசனத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்பது பரிசோதிக்கத்தக்கதாகும். ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக்கொள்ளுகிறான். அங்ஙனம் பிராமணன் என்பது அவனுடையஜீவனையா? தேகத்தையா?  பிறப்பையா?  அறிவையா?செய்கையையா? தர்ம குணத்தையா? அவனுடைய ஜீவனேபிராமணனென்றால் அஃதன்று. முன் இறந்தனவும், இனிவருவனவும் இப்போதுள்ளனவும் ஆகிய உடல்களிலெல்லாம்ஜீவன் ஒரே ரூபமுடையதாயிருக்கின்றது. ஒருவனுக்கே செய்கைவசத்தால் பலவித உடல்கள் உண்டாகும்போது, எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத்தான் இருக்கின்றது.ஆகையால், (அவனுடைய) ஜீவன் பிராமணனாக மாட்டாது.ஆயின், (அவனது) தேஹம் பிராமணனெனில் அதுவுமன்று.சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதர்களுக்கும்பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட உடலும் ஒரே அமைப்புடையதாகத் தானிருக்கிறது. மூப்பு, மரணம், இயல்புகள், இயலின்மைகள்- இவையனைத்தும் எல்லா உடல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன. மேலும், பிராமணன் வெள்ளை நிறமுடையவன்,க்ஷத்திரியன் "செந்நிறமுடையவன், வைசியன் மஞ்சள்நிறமுடையவன், சூத்திரன் கருமை நிறமுடையன் என்பதாகஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும், உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்த பின் கொளுத்தும்மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும்.ஆதலால், (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின், பிறப்புப் பற்றி பிராமணன் என்று கொள்வோமென்றால்,அதுவுமன்று. மனிதப்பிறவியற்ற ஐந்துக்களிடமிருந்துகூடப் பல ரிஷிகள் பிறந்ததாகக் கதைகளுண்டு. ரிஷ்யசிருங்கர் மானிலிருந்தும்,ஜாம்பூகர் நரியிலிருந்தும், வால்மீகர் புற்றிலிருந்தும், கௌதமர் முயல் முதுகிலிருந்தும் பிறந்ததாகக் கதை கேட்டிருக்கிறோம். அது போக, வஸிஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்தவர்; வியாஸர் மீன் வலைச்சியின் வயிற்றில் பிறந்தவர்; அகஸ்தியர் கலசத்திலே பிறந்ததாகச் சொல்லுவார்கள். முன்னாளில் ஞானத்தில் பெருமையடைந்தவர்களாகிய பல ரிஷிகளின் பிறவி வகை தெரியாமலேயேஇருக்கிறது. ஆகையால், பிராமணன் எனக் கொள்வோமென்றால்,அதுவுமன்று. க்ஷத்திரியர் முதலிய மற்ற வர்ணத்தவர்களிற்கூடஅநேகர் உண்மை தெரிந்த அறிவாளிகளா யிருக்கிறார்கள். ஆதலால்,அறிவு பற்றி ஒருவன் பிராமணன் ஆகமாட்டான். ஆயின், செய்கைபற்றி ஒருவனைப் பிராமணனாகக் கொள்வோமெனில் அதுவுமன்று.பிராப்தம், சஞ்சிதம், ஆகாமி என்ற மூவகைச் செயல்களும்,ஒரேவிதமான இயற்கையுடையனவாகவே காணப்படுகின்றன. முன்செயல்களால் தூண்டப்பட்டு, ஜனங்களெல்லோரும் பின் "செயல்கள்செய்கிறார்கள். ஆதலால், செய்கை பற்றி ஒருவன் பிராமணனாய் விடமாட்டான். பின் தர்மஞ் செய்வோனைப் பிராமணனாகக் கொள்வோமென்றால், க்ஷத்திரியன் முதலிய நான்கு வருணத்தவரும் தர்மஞ்செய்கிறார்கள். ஆதலால், ஒருவன் தருமச் செய்கையைப்பற்றியே பிராமணனாகி விடமாட்டான். அப்படியானால் யார்தான் பிராமணன்?  எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில்என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போல கலந்திருப்பதும், அளவிடக்கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை, நேருக்கு நேராகத் தெரிந்து காமம், ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கினவனாய்,இடம்பம் அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ, இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி, ஸ்மிருதி, புராண, இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும். மற்றப்படி, ஒருவனுக்கு பிராமணத்துவம் சித்தியாகாது என்பது உபநிஷத்து.