பக்கம் எண் :

சமூகம் - பிராமணன் யார்?

பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமையைப் பெற முயற்சி செய்யக்கடவர். க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் முதலிய மற்ற லௌகிக வர்ணங்களுக்கும்இதுபோலவே தக்கவாறு லக்ஷணங்கள் அமைத்துக் கொள்க. அவ்வவ்விலக்கணங்கள் பொருந்தியவர்களே அவ்வவ் வருணத்தின்ரென்று மதிக்கத்தக்கவர்கள், அந்த. இலக்கணங்கள்இல்லாதவர்கள் அவற்றையடைய முயற்சி செய்யவேண்டும். போலீஸ் வேவுத்தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான்.குமாஸ்தா வேலை செய்பவன் க்ஷத்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்துவிட்டுப்போன பொருளை யழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களையெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டுச் சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆகமாட்டார்கள். இவர்களெல்லாம் மேம்பாடுடைய ஆரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக் கூட்டத்தார். நமது தேசம் முன்போலக்கீர்த்திக்கு வரவேண்டுமானால், உண்மையான வகுப்புகள் ஏற்படவேண்டும். பொய்வகுப்புகளும் போலிப் பெருமைகளும் நசிக்க வேண்டும். இதுநம்முடைய வேத சாஸ்திரங்களின் கருத்து.