பக்கம் எண் :

சமூகம் - எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை

நமது தேசத்தில் வறுமை அதிகம்.

முன்னேயிருந்தவர்களின் கோழைத்தன்மை,ஒற்றுமைக் குறைவு, சாஸ்திர ஞானமில்லாமை, பல தேச விவகாரங்கள் தெரியாமை, மூட கர்வங்கள்முதலியவற்றால் லக்ஷ்மியை இழந்தோம். மேற்படிகுணங்கள் இன்னும் நம்மைவிட்டு நன்றாக "நீங்கவில்லை. நாளொன்றுக்கு சராசரியாக நமது நாட்டில்ஒரு மனிதனுக்கு முக்காலணா வரும்படி யென்று கணக்காளிகள் சொல்லுகின்றார்கள்; அதாவது, நரகத்துன்பம் உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இப்படிஇல்லை.

இந்த நிலையில் நமக்குள்ளே பலர் பலவிதமானஇகழ்ந்த காரியங்கள் செய்வது வியப்பில்லை. மிகுந்தசெல்வமுடைய நாடுகளிலே கூட மனிதர் பணத்துக்காகஎத்தனையோ மானங்கெட்ட காரியங்கள் செய்கிறார்கள்ஏழைத் தேசத்தாராகிய நாம் இவ்வளவு மானத்துடன்பிழைப்பதே பெரிய காரியம்.

பணம், பொதுக் கல்வி, விடுதலை மூன்றும்"இல்லாவிட்டால் அந்த நாட்டில் மானமேது?

பிராமணருக்குள் விவாஹ காலங்களிலே எதிர்ஜாமீன் கேட்கும் வழக்கத்தை நிறுத்திவிடவேண்டும் என்றும்சில வருஷங்களாகப் பலர் பேசி வருகிறார்கள். மானமுடைய தேசங்களிலே சீதனம் கொடுத்தல் பெண்களின்பெற்றோர் செய்வது சாதாரணமேயாம். ஆனால்,மாப்பிள்ளைகளுக்கு விலைத்தரங்கள் போட்டு, இன்ன பரீக்ஷை தேறினவனுக்கு இத்தனை ரூபாய் கிரயம் என்றுமுடிவு செய்து வைத்து, அதன்படி விவாஹங்கள் நடத்தும்வழக்கமில்லை.

சீனா, ஜப்பான், நவீன பாரசீகம் முதலிய"எல்லா மனுஷ்ய தேசங்களிலேயும் விவாஹம் அன்பையேஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகிறது. இங்கே,பணத்துக்காக விவாஹங்கள் செய்து கொள்ளுகிறார்கள்.சாதாரணமாகப் பெண்களுக்கு விலை கூறி விற்பதுவழக்கமாகவே இருந்தது. இப்போது 'பூசுரர்'(பூமண்டலத்திலேதேவர்) ஆகிய பிராமணக் கூட்டத்தார் மாப்பிள்ளைக்குவிலைபோட்டு விற்கத்தொடங்கி இருக்கிறார்கள். புண்ய பூமி!பணம் கொடுக்கச் சொல்லி ஏழைக் குடும்பத்தாரை வதைசெய்யும் போது தான் துன்பம் அதிகப்படுகிறது. பெண்கள்ருதுவாகு முன்பு விவாகம் நடந்து தீரவேண்டும். ஒருஜாதியிலே, ஒரு பிரிவிலே, ஒரு சாகையிலே, ஒரு கிளையிலே,ஒரு பகுதியிலே, ஒரு வகுப்பிலே, ஒரு கோணத்திலே,ஓரோரத்துக்குள்ளே தான் ஸம்பந்தங்கள் செய்து கொள்ளலாம்.இல்லாவிட்டால் 'ஸநாதன அதர்மம்' முட்ட வருகிறது. மாப்பிள்ளைகளோ உயர்ந்த கிரயங்கள் கொடுத்தாலொழியஅகப்படுவதில்லை. முக்கால்வாசிக் குடும்பத்தார் நித்திய ஜீவனத்துக்கு வழியில்லாத ஏழைகள். நாலைந்து பெண்களைப்பெற்று விட்டால், இந்த ஏழைகள் என்ன செய்வார்கள்? திருநெல்வேலி ஜில்லாவில் எனக்குத் தெரிந்த ஒருகிராமத்திலே ஒரு பெண்ணுக்கு விவாஹம் நடந்தபோது,அவளுடைய பெற்றோர் மாப்பிள்ளைக்குப் பணங்கொடுத்தார்கள். பிறகு ருது சாந்தியின்போது, அந்த மாப்பிள்ளை, 'ஐந்நூறு ரூபாய் கொடுத்தால்தான் ருதுசாந்திசெய்து கொள்வேன். இல்லாவிட்டால் பெண் உங்கள்வீட்டோடே இருக்கட்டும்' என்று சொல்லி ஐந்நூறு ரூபாய்தண்டம் வாங்கிக் கொண்டான்.