பக்கம் எண் :

சமூகம் - வருங்காலம்

உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக்கொண்டு வருகிற தென்பதை தமிழ்நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.ஒவ்வொரு வரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதியவைத்துக்கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்திசெலுத்தாமல் அற்பவிஷயங்களிலும், அற்பச் செய்கைகளிலும்நாளையெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத்தவளைகளைப் போல்வாழ்வதிலே பயனில்லை.

வர்த்தகஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப்பழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேடவேண்டும். படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களையும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத்தர வேண்டும். ராஜ்யவிவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு, மற்ற ராஜ தந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகள்செய்து நிறைவேற்றிப் புகழ் பெறவேண்டும். கைத்தொழில்களின்விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும்அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடந் தருகின்றன.

திருஷ்டாந்தமாக, நேர்த்தியான சித்திரங்களும்வர்ணங்களும் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும் அழகானஆடைகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில்இருக்கிறார்கள் இவர்களுக்குப் படிப்பில்லை; வெளியுலகநிலை தெரியாது. கையிலே முதற் பணமுமில்லை. நமக்குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடிஆராய்ச்சிகள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன்வாங்கக்கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்துஅவற்றை நமது தொழிலாளிகளைக் கொண்டு செய்வித்தால்மிகுந்த லாபமுண்டாகும்.

இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமுங் கொடுப்பது. எல்லாவிதமான கைத்தொழில்களும் தற்காலத்தில் இரும்பு யந்திரங்களாலே செய்யப்படுகின்றன.ஆதலால், நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பலவிதங்களிலேஅறிவு விருத்தியும் ஜீவன ஸௌகர்யங்களும் ஏற்பாடு செய்துகொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத் தொழில்களைவளர்க்க வேண்டும்.

இனி, வர்ணப்படம், தையல் வேலை... மைத்தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களின்அறிவு மிகவும் சிறந்தது. கொஞ்சம் சிரமப்பட்டால், இந்தத்தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிடலாம். சிறிது காலத்துக்கு முன்பு சீனத்திலிருந்தும்ஜப்பானிலிருந்தும் பல சித்திர வேலை களைக் கொண்டுபோய் அமெரிக்காவில் காட்டியபோது, அங்கே அவற்றிற்குமிகுந்த புகழ்ச்சியும் பிரியமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதை நாமேன் செய்யக்கூடாது?