பக்கம் எண் :

சமூகம் - பருந்துப் பார்வை

1. ஒரு தேசத்தார் ராஜ்ய மஹிமை பெற வேண்டுமானால் அவர்கள் ஏகதேவ பக்தி யுடையவர்களாக இருக்க வேண்டும் என்று "மாடர்ன் ரிவ்யூ" பத்திரிகை சொல்லுகிறது.அதாவது, 'முஹம்மதியர், கிருஸ்துவர், யூதர் முதலியவர்களைப் போல் ஒரே கடவுளை நம்பித் தொழவேண்டும்.கிறிஸ்துவர்களிலே ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவர்கள் பலஞானிகளையும் தாயையும் வணங்குகிறார்கள். அப்படியில்லாமல் ப்ரோதஸ் தாந்துக் கூட்டத்தாரைப்போல் ஒற்றைக்கடவுளைத் தொழவேண்டும். இல்லாவிட்டால், இராஜ்ய வலிமைஉண்டாகாது' என்று அந்தப் பத்திராதிபர் நினைக்கிறார். இது பிழை. இதற்கு மனுஷ்ய சரித்திரத்திலே எவ்விதமான ஆதாரமும்கிடையாது. ஹிந்து மதம் ஆழ்ந்த உண்மை. எல்லா மதமும்உண்மைதான். ஹிந்து மதம் ஆழ்ந்த உண்மை. உண்மையாலேதான் எல்லா நன்மையும் உண்டாகும்.

2. வைஸ்ராய் ஸபையிலே ஜனப்பக்கத்துப் பிரதிநிதிகள்22 பேரிலே 19 பேர் சர்க்காருக்கு ஒரு அறிக்கையிட்டிருப்பதாகத்தங்கள் பத்திரிகையிலே பார்த்தேன், சண்டை முடிந்த பிறகு,பொருளாட்சியும் மாகாண ஆட்சியும் ஜனங்களை ஆயுதம்தரிக்க இடங்கொடுக்கவேண்டும் என்பதும் மேற்படி அறிக்கையின்சாரம் என்று தோன்றுகிறது. போதும்; பிரதிநிதிகள் சரியாகக் கேட்கவில்லை; ஏதோ தங்கள் புத்திக்குத் தோன்றிய வரை செய்தார்கள்.இருந்தாலும், பொதுவாக, அவர்கள் கேட்கிற அளவேனும் நிச்சயமாகக் கிடைத்துவிட வேண்டும். அப்போதுதான் தேசத்து ஜனங்களுக்குச் சிறிது சந்தோஷம் ஏற்படும்.

3. தக்ஷிணத்துப் பாஷைகளிலே - அதாவது தமிழிலும்தெலுங்கிலும், கன்னடத்திலும், மலையாளத்திலும் - சாஸ்திர (சயின்ஸ்) பாடம் கற்றுக்கொடுப்பதற்கு மேற்படி பாஷைகள் தகுதியில்லை யென்று பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார்மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார். அவருக்கு இவ்விடத்துப்பாஷைகள் தெரியாது. ஸங்கதி தெரியாமல் விரிக்கிறார். சாஸ்திரபாஷை நமது பாஷைகளில் மிகவும் எளிதாகச் சேர்த்துவிடலாம்.மேலும், இயற்கை நடையிலே இங்கிலீஷைக் காட்டிலும் தமிழ்அதிக நேர்மையுடையது. ஆதலால், சாஸ்திரப் பரவசனத்துக்குமிகுந்த சீருடையது. இந்த ஸங்கதி நம்மவர்களிலே கூடச் சிலஇங்கிலீஷ்ப் பண்டிதருக்குத் தெரியாது. ஆதலால் மிஸ்டர்ரோலோவை நாம் குற்றஞ் சொல்வது பயனில்லை.