பக்கம் எண் :

சமூகம் - மாலை

நமக்கு முடியாத காரியத்தைக் கைவிடலாகாது. நம்மைக்காட்டிலும் திறமையுள்ள ஒருவன் கையிலே கொடுத்து அவன் கீழே சிற்றாளாயிருந்து தொழில் பழகிக் கொண்டு, பிறகுநாமாகச் செய்ய வேண்டும். இதை நாட்டுக் கோட்டைச்செட்டிகளும் கவனிக்கலாம். காங்கிரஸ் சபையாரும் கவனிக்கலாம்.        *                  *                *        ஒரு தரம் ஒரு வழக்கம் ஏற்பட்டுப்போனால் பிறகு அதை மாற்ற முடியாது. ஆதலால் புதிய வழக்கத்தைத் தொடங்குவோர் பின் வரக்கூடிய பலாபலன்களைத் தீர யோசனை செய்தபிறகு தொடங்க வேண்டும்.

இது அனேகமாக எல்லா மனிதருக்கும் நினைப்பூட்டவேண்டிய விஷயம். மாறுதல் இயற்கை, நல்லபடியாக மாறிக்கொண்டுபோதல் புத்திமான்களுக்கு லக்ஷணம்.        *                   *                 *        மஹம்மதிய புஸ்தக சாலைகள், வாசகசாலைகள் கல்விச் சங்கங்கள் முதலியவற்றிலே ஹிந்து பண்டிதர்களும், ஹிந்துக்களின் கல்விக் கூட்டங்களிலே முஹம்மதிய வித்வான்களும் வந்து உபந்யாஸங்கள் செய்யும் காட்சி சில நாளாக நமது தேசத்தில் அதிகப்பட்டு வருகிறது. நமது ஜனங்களுக்குக் கொஞ்சம்கொஞ்சம் கண் திறக்கிறது. எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். "ஒரு குழம்புக்குள்ளே இரண்டு "தான்" போட்டாளாம்; ''தான்'' தெரியாதா, குழம்புத் தான்; ஒன்று கத்திரிக்காய், ஒன்று உருளைக்கிழங்கு! இதிலே கத்திரிக்காய், உருளைக்கிழங்கைத் தின்று விட்டதாம்" என்றொரு பச்சைக்குழந்தைக் கதையுண்டு. கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம்.

முஹம்மதிய சாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டால்ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.            *           *            *        ஒரு விரதமெடுத்தால் என்ன வந்தாலும் அதை கலைக்கக் கூடாது. ஆரம்பத்தில் கலைந்து கலைந்துதான் போகும்.திருபத்திரும்ப நேராக்கிக் கொள்ள வேண்டும். நமது தேசத்திலே (ஸயின்ஸ்) சாஸ்திரப் படிப்பு வளரும்படி செய்ய வேண்டும் என்றுசில பண்டிதர்கள் அபேக்ஷிக்கிறார்கள். இதற்கு மற்ற ஜனங்களிடமிருந்து தக்க உபபலம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த நோக்கத்தை மறந்து விடலாகாது. ஊதுகிறபோது ஊதினால் விடிகிறபோது விடியும். சாஸ்திரப்படிப்பு முக்கியம். அதிலேதான் நன்மையெல்லாம் உண்டாகிறது. ஸயின்ஸ் மனித ஜாதியை உயர்த்திவிடும்.அது இஹத்துக்கு மாத்திரமேயன்றி பரத்துக்கும் ஸாதனம் ஆகும்.காசிக்கு வழி தெற்கே காட்டுகிற மனிதன் கைலாயத்திற்கு நேர்வழிகாட்டுவானோ?

நமது பூர்விகர் ஸயின்ஸ் தேர்ச்சியிலே நிகரில்லாமல்விளங்கினார்கள். அந்தக் காலத்து லௌகீக சாஸ்திரம் நமக்குத்தெரிந்த மாதிரி வேறு யாருக்குந் தெரியாது இந்தக் காலத்துஸங்கதிதான் நமக்குக் கொஞ்சம் இழுப்பு.