பக்கம் எண் :

சமூகம் - மாலை

பசி வந்தால் கோபம் வருகிறது. பசி யடங்கினால்கோபம் அடங்குகிறது. இதைக் கருதி அறிவுடைய தகப்பன்தன் பிள்ளைக்கு வயிறு நிறைய சோறு சேர்த்துக் கொடுத்தபிறகு தான் பக்ஷணம், பழம், மிட்டாய் அல்லாவிட்டால்ஊதுகுழாய் வாங்கிக் கொடுக்கவேண்டும். ஒருவன் ஊருடன்கூடி வாழ விரும்பினால் ஊருக்கு வயிறு நிறைய அன்னம்போடவேண்டும். சிற்சிலர் புதிய புதிதான தர்மங்கள் கண்டுபிடிக்கிறார்கள். ஏழைக்கு அன்னம் போடுவதுதான் உத்தமதர்மம். இது முற்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுடைய வயிற்றுக்குக் கஞ்சிகாட்ட முடியாவிட்டால், அந்த தேசத்தில் எவ்வளவு பெரியவித்வானிருந்தும் பிரயோஜனமென்ன?  நாகரீகம் உயர்வதினாலே போஜனம் குறைவாக இருந்தால் அந்த நாகரீகம்அவசியமில்லை. சில நாட்டுக் கோட்டைச் செட்டிகள்நாகரீகமாகி இந்தக் காலத்தில் பணம் செலவுபண்ணும் மாதிரியைப் பார்க்கும்போது பழைய காலத்து அநாகரீகமேவிசேஷமென்று தோன்றுகிறது. முன்பெல்லாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் கோயில் கட்டுவார், சத்திரங்கள்வைப்பார், பள்ளிக்கூடம் வைப்பார். இதெல்லாம் அநாகரீகமென்று தள்ளிவிட்டுச் சில புது நாகரீகச் செட்டிகள் காட்டுநெருப்பிலே பசு நெய்யைக்கொண்டு கொடுக்கிறார்கள்.வேசைக்கும், கூத்துக்கும், வீண்விருந்துக்கும் செலவிடுகிறார்கள்.நாகரீகம் வேண்டியதில்லை; முதலாவது சகல ஜனங்களுக்கும்சோறு கண்டுபிடி. நாட்டுக்கோட்டையார் மாத்திரமில்லை.எல்லாச்செட்டியாரும் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

ஒரு விரதமெடுத்தால் அது கலையவிடக்கூடாது.இன்னொருதரம் எதற்காகச் சொல்ல வந்தேன் தெரியுமா?ஒருவன் யோக சாஸ்திரம் பழகப்போய் மௌனவிரதம்எடுத்தான். அப்போது அவனுக்கு வயிற்றுக்கடுப்பு வந்தது.பல கடன்காரர்கள் வந்தார்கள். ஒரு புது சிஷ்யன் வந்தான்.இராத்திரியில் இரண்டு திருடர்கள் வந்தார்கள். இரண்டுவிருந்துகள் வந்தன. ஒரு கல்யாணம் வந்தது, அவசியமாய்ப்போய்த் தீரவேண்டியது. இன்னும் பல விஷயங்கள்வந்தன, ஒரே நாளில்! அவன் மௌனவிரதத்தைக் கலைத்துவிட்டான். உடனே வயிற்றுக்கடுப்பு திர்ந்து போய்விட்டது.கடன், சிஷ்யன், திருடன், கல்யாணம் தீர்ந்து போய்விட்டன.மறுநாள் ஒரு தொல்லையுமில்லை.

பிறகு "ஹா! இந்த ஸங்கடங்களெல்லாம் இத்தனைவிரைவாகத் தொலைந்துபோமென்று தெரிந்தால் நான் மௌனவிரதத்தைக் கலைத்திருக்கமாட்டேனே" என்று சொல்லி அந்தமனிதன் வருத்தப்பட்டான். எல்லா விரதங்களுக்கும் இதுதான்விதி. நாம் விரதம் எடுத்தவுடனே, அதை நிறைவேற்றத்தக்கமன உறுதி நமக்குண்டா என்று பார்ப்பதற்காக, இயற்கைத்தெய்வம் எதிர்பாராத பல ஸங்கடங்களைக் கொண்டு சேர்க்கும்.அந்த ஸங்கடங்களையெல்லாம் உதறி யெறிந்துவிட்டு நாம்எடுத்த விரதத்தை நிறைவேற்றவேண்டும். விரதம் இழந்தார்க்குமானமில்லை. விரதத்தை நேரே பரிபாலனம் பண்ணினால்சக்தி நிச்சயம்.