பக்கம் எண் :

சமூகம் - உடம்பு

உடம்பை வலிமை செய்வதற்கு மன வலிமை வேண்டும்.

கஸரத் முதலிய பழக்கங்களில் உடம்பு பலமேறுவதற்கு மனவுறுதியும் ஆசையுமே முக்கிய காரணங்களாக வேலைசெய்கின்றன.

ராமமூர்த்தி முதலிய நமது நாட்டு பலவான்களும் ஸாண்டோ முதலிய அன்னிய நாட்டு பலவான்களும் இவ்விஷயத்தை மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்கள். கையிலே தண்டு முதலிய வற்றை எடுத்துச் சுழற்றும் போது, வீமசேனனை நினைத்துக்கொள்ள வேண்டுமென்று எங்களூரிலே ஒரு பஹல்வான் சொல்லுவார். பிராணாயாமத்தை மாத்திரமேயன்றி 'தியானம்' முதலிய யோக முறைகளையும் ராமமூர்த்தி பெருந்துணை யென்று சொல்லுகிறார்.

ஸாண்டோ தமது ''டம்பெல்ஸ்'' என்று சொல்லப்படும் இரும்புக்குண்டுகளை வைத்துப்பழகுவோர் வெறுமே கைகளில் குண்டுகளைத் தூக்கி அசைத்தால் பிரயோஜனமில்லை என்பதை மிகவும் தெளிவாக எழுதியிருக்கிறார்.

குண்டைப் பிடித்து உறுதியுடன் முன்னே நீட்டிய கையை மடக்கும்போது, உனது மனோபலம் முழுதையும் கைத்தசைகளிலே செலுத்தி மெதுவாக மடக்கவேண்டும். கவனத்தை மற்றொரு பொருளிலேசெலுத்தினால் தசைகளுக்கு சரியான வலிமை யேறாதென்று சொல்லுகிறார்கள்.

உடம்பு, நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதின் வசமாகும், ஆகையால் உடம்பிலுள்ள நோய்களைத் தீர்த்து வலிமை யேற்றுவதற்கு, மனவுறுதி, நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத் தகும்.