பக்கம் எண் :

சமூகம் -  செல்வம் (1)

ருஷ்யாவில் ''சோஷலிஸ்ட்'' கட்சியார் ஏறக்குறைய நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிவிடக் கூடுமென்று தோன்றுகிறது. சோஷலிஸ்ட் "கட்சியென்பதைத் தமிழில் ஸமத்துவக்கட்சி என்று சொல்லலாம். அதுகூட சரியான மொழிபெயர்ப்பாகாது. சொத்து விபாகம் செய்திருப்பதில், இப்போது சிலர் செல்வரென்றும் பலர் ஏழைகளென்றும்  ஏற்பட்டிருப்பதை மாற்றி உலகத்திலுள்ள சொத்தை அதாவது பூமியை உலகத்து ஜனங்களுக்கு ஸமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், தொழில் விஷயத்தில் இப்போது போட்டிமுறை இருப்பதை மாற்றிக் கூடியுழைக்கும் முறையை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் மேற்படி கட்சியாருடைய முக்கியமான கோட்பாடு. ஆதலால் இந்தக் கட்சிக்கு ஐக்கியகட்சி என்று பெயர் சொல்லுவது பொருந்தும் என்று தோன்றுகிறது. இதை ''அபேதக் கட்சி'' என்று சொல்வாருமுளர்.

இந்தக் கட்சி இந்தியாவில் ஏன் இதுவரை ஏற்பட்டு விருத்தியடையவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். முதலாவது காரணம் ஹிந்து ஜன ஸமூக அமைப்பில் ஐரோப்பாவில் இருப்பதுபோலவே அத்தனை அதிகமான தார தம்மியம் இல்லை. முதலாளி, தொழிலாளி, செல்வன் ஏழை இவர்களுக்கிடையே ஐரோப்பாவில் உள்ள பிரிவும் விரோதமும் நம் தேசத்தில் இல்லை. ஏழைகளை அங்குள்ள செல்வர்அவமதிப்பதுபோலே நமது நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது ஏழைகளுக்குத் தானம் கொடுப்பது என்ற வழக்கம் நமது தேசத்தில் இருக்குமளவு அந்தக் கண்டத்தில் கிடையாது. லண்டன் நகரத்தில் பிச்சைக்காரனைப் போலீஸ்காரன் பிடித்துக்கொண்டு போவான். பிச்சைக் குற்றத்திற்காக மாஜிஸ்டிரேட் தண்டனை விதிப்பார். நமது தேசத்தில் "தேஹி" என்று கேட்டவனுக்கு "நாஸ்தி" என்று "சொல்கிறவனை எல்லோரும் சண்டாளன் என்று தூஷிப்பார்கள்.

இங்கிலீஷ் நாகரீகம் நமது தேசத்தில் நுழையத் தொடங்கியதிலிருந்து, இங்கும் சில மூடர் பிச்சைக்காரரை வேட்டையாடுவது புத்திக் கூர்மைக்கு அடையாளமென்றுநினைக்கிறார்கள். பிச்சைக்காரன் வந்தால் ?ஏண்டா தடி போலிருக்கிறாயே! பிச்சை கேட்க ஏன் வந்தாய்'' உழைத்து ஜீவனம் பண்ணு'' என்று வைது துரத்துவார்கள். ''உழைத்து ஜீவனம் பண்ணு'' என்று வாயினால் சொல்லி விடுதல் எளிது. உழைக்கத் தயாராக இருந்தாலும், வேலையகப்படாமல் எத்தனை லக்ஷலக்ஷம் பேர் கஷ்டப்படுகிறார்கள் என்ற விஷயம் மேற்படி நாகரீக வேட்டை நாய்களுக்குத் தெரியாது.

சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை. ஆனாலும், பிச்சையென்று கேட்டவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை; வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை.