பக்கம் எண் :

சமூகம் - செல்வம் (1)

சோம்பேறி! பிச்சைக்காரன் மாத்திரம் தானா சோம்பேறி?  பணம் வைத்துக்கொண்டு வயிறு நிறைய தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளை சீர்திருத்தப் போவது விசேஷம். பொறாமையும் தன் வயிறு நிரப்பிப் பிற வயிற்றைக்கவனியாதிருத்தலும், திருட்டும், கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிறார்கள். ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு, செல்வர் செய்யும் அநியாயம் அதிகம். இதைக் கருதியே ப்ரூதோம் என்ற பிரெஞ்சு தேசத்து வித்துவான் "உடைமையாவது களவு" என்றார்.

ஏழைகளே இல்லாமற் செய்வது உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும் கொள்ளை யிடுவதிலும் "உபயோகப்படுத்துகிறார்கள். ஐரோப்பிய யந்திரத்தொழிற்சாலைகள் ஏற்பட்டதிலிருந்து ஏழைகளுக்கு முன்னைக் காட்டிலும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கின்றனவேயன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை.

ஏழைகளைக் கவனியாமல் இருப்பது பெரிய ஆபத்தாக முடியும். கிறிஸ்துவ வேதத்தில் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் முதல் மனிதனாகிய ஆதாம் என்பவனுக்கும் அவனுடைய பத்தினியாகிய ஏவாளுக்கும் இரண்டு புத்திரர் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. மூத்த குமாரன் பெயர் காயீன். இளையவன் பெயர் ஆபேல். காயீன் ஆபேலிடம் விரோதமாய் ஆபேலைக் கொன்று விட்டானாம், அப்போது கடவுள் காயீனை நோக்கி  "உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?"  என்று கேட்டாராம். அதற்குக் காயீன் "எனக்குத் தெரியாது. சகோதரனுக்கு நான் காவலாளியோ?"என்றானாம்.

அதுபோல உலகத்துக்குச் செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டெடுத்துக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், "அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையாயிருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?"என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்யவேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும்பொருளாளிகள் ஒரு சபை கூடி அந்தக் கிராமத்திலுள்ள ஏழைகளின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய யோசனைகள் பண்ணி நிறை வேற்ற வேண்டும். அன்பினால் உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அங்ஙனம் செய்யாமல்அஜாக்கிரதையாக இருந்தால், ஐரோப்பாவைப்போல் இங்கும், ஏழை செல்வர் என்ற பிரிவு பலமடைந்து விரோதம் முற்றி, அங்கு ஜனக்கட்டு சிதறும் நிலைமையிலிருப்பதுபோல், இங்கும் ஜனசமூஹம் சிதறி மஹத்தான விபத்துக்கள் நேரிட இடமுண்டாகும்.

பொருளாளிகள் இடைவிடாத உழைப்பையும், அன்பையும், ஸமத்துவ நினைப்பையும் கைக்கொண்டான், உலகத்தில் அநியாயமக உத்பாதங்கள் நேரிட்டு உலக மழியாமல் காப்பாற்ற முடியும். பராசக்தி மனுஷ்ய ஜாதியை அன்பிலும் ஸமத்துவத்திலும் சேர்த்து நலம் செய்க.