பக்கம் எண் :

சமூகம் - செல்வம் (2)்

"பணமில்லாதவன் பிணம்" என்று பழமொழி சொல்கிறது. இதன் கருத்தைத் தான் திருவள்ளுவர் வேறொரு வகையிலே "பொருளில்லார்க் கிவ்வுலகமில்லை" என்று சொல்லியிருக்கிறார்.

இந்த உலகிலுள்ள எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் வறுமைத் துன்பம் கொடியது. இவ்வுலகத்தில் எல்லாச் சிறுமைகளைக் காட்டிலும் ஏழ்மையே அதிகச் சிறுமையாவது. "இன்மையின் இன்னாததில்" என்றும் "இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்றீன் றெடுத்த தாய் வேண்டாள்; செல்லாதவன் வாயிற் சொல்" என்றும் முன்னோர் சொல்லியிருக்கிறார்கள்.

இங்ஙனமே, ஏழ்மையின் நிகரற்ற இகழ்ச்சியையும், துன்பத்தையும் விளக்குவனவாய்த் தமிழ்ப் பண்டைத் நூல்களிலும், காவியங்கள் முதலியனவற்றிலும் காணப்படும் வசனங்களையும் உதாரணங்களையும் எடுத்துக்காட்ட முயன்றால், அத்தொகுதி ஆயிரம் சுவடிகளுக்கு மேலாய் விடும்.இவ்விஷயமாக இதர பாஷைகளிலுள்ள நூல்களிலும் இவ்வாறே செறிந்து கிடக்கும் வாக்கியங்களும் திருஷ்டாந்தங்களும் கணக்கில்லாதனவாம்.

எல்லா தேசங்களிலும் எல்லா "பாஷைகளிலும் அறிஞரெல்லாம் ஒருங்கே வறுமைதான் எல்லா நரகங்களைக் காட்டிலும் மிகக் கொடிது என்பதை அங்கீகாரம் செய்திருக்கிறார்கள். ஆதலால், இந்த விஷயத்துக்கு நாம் மேற்கோளாதாரங்களை அதிகமாகக் காட்டவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வறுமை மிகமிகப் பெரிய இகழ்ச்சியும் துன்பமுமாகும் என்பது கற்றோர்க்கு மட்டுமே யல்லாது கல்லாதார்க்கும் நன்குதெரிந்த விஷயமேயாம்.

எல்லா உயிர்களும் மரணத்துக்கு அஞ்சுகின்றன. ஆனால், வறுமை மரணத்திலும் பெரிய துன்பமென்றுணர்ந்த ஏழைகள் மாத்திரமே "தெய்வமே எனக்கொரு சாவுவராதா" என்று சில சமயங்களில் வேண்டுவது காண்கிறோம்.

இந்த ஏழ்மை இத்தனை கொடிதாக ஏற்பட்ட காரணந்தான் யாதெனில் சொல்லுகிறேன். உணவு தான் ஜீவ ஜந்துக்களின் அவசரங்களனைத்திலும் பெரிய அவசரமானது.

"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை       தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்       கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்"

எனவே, இவ்வுலக இன்பங்கள், பெருமைகள் எல்லாவற்றிற்கும் அஸ்திவார பலம் உணவு. உணவு இல்லாத இடத்தில் அவை நிற்க வழியில்லை. மேலும், வெறுமே, உயிர் தரித்திருப்பதற்குக் கூட ஆஹாரம் அவசியமாயிருக்கிறது. சோறில்லாவிட்டால் உயிரில்லை. இது கொண்டே, பெரும்பான்மையோருக்கு அன்றாடம் உணவு கிடைக்குமென்ற உறுதியில்லாமலும், பலருக்கு உணவே கிடையாதென்பது உறுதியாகவும் ஏற்படுத்திவைக்கும் வறுமையை இத்தனை பெரிய கொடும் பகையாகக் கருதி மனிதர்கள் அஞ்சுகின்றனர்.