பக்கம் எண் :

சமூகம் - அனந்த சக்தி

எறும்பு இறந்துபோன புழுவை இழுத்துச்செல்லுகிறது; எதனால்?  சக்தியினால். தூமகேது அநேகலட்சம் யோசனை தூரமான தனது வாலை இழுத்துக்கொண்டு திசைவெளியில் மஹா வேகத்தோடுசுழலுகின்றது; எதனால்?  சக்தியினால். அந்த தூமகேதுஎழுபத்தைந்து வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னைச்சுற்றிவரும்படி சூரிய கோளம் நியமிக்கிறது; எதனால்?சக்தியினால்.

ஓர் கன்னிகை பாடுகிறாள். நெப்போலியன்ஐரோப்பாக் கண்டம் முழுவதையும் வெல்லுகிறான். இவைஇரண்டிற்கும் "சக்தியே ஆதாரம். கண்ணுக்குப்புலப்படுவதும், ஊக்கத்திற்குப் புலப்படுவதுமாகியவெளியுலகங்கூட எல்லையற்றதென்று பண்டிதர்கள்கண்டிருக்கிறார்கள். இந்த எல்லையற்ற உலகத்தை இயக்கும்சக்தி தானும் எல்லையற்ற தாகும். அநந்தமானது; அதனிலும்பெரிது. இவ்வித சக்தியை மனிதன் பாவனை செய்வதால்பலவிதப் பயன்களுண்டு ."யத்பாவயஸி தத் பவஸி,"எதனைப் பாவிக்கிறாயோ நீ அதுவாக ஆகின்றாய்.

ஆனால், இங்ஙனம் பாவனை செய்வது லேசானகாரியமென்று நினைத்துவிடலாகாது. உயிர் தழும்பியதும் கனல்வதுமான சிரத்தையுடன் பாவனை செய்ய வேண்டும். இதனைவீண் கதையென்று நினைத்து விடவேண்டாம். விடாமல்அனுஷ்டானம் செய்து பார்த்தால் இதன் பயன் தெரியும்.

ஞானிகளென்றும் யோகிகளென்றும்சொல்லப்படுவோர், இந்த சக்தியை, மனதறிந்து சில முறைகளைஅனுஷ்டித்து பெறுகிறார்கள். ஸாமான்ய ஜனங்கள் விஷயம்தெரியாமல் இயற்கை முறையிலே சிறிது பெற்றவர்களாகின்றனர்.சக்தி சிறிதும் இல்லாவிட்டால், ஒருவன் க்ஷண நேரங்கூடமூச்சு விட்டுக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்க முடியாது.வெளிக் காற்றிலே உலவி அத்துடன் யோகப்படுவதால் சக்திஉண்டாகிறது. சரீரத்தை உழைப்புக்கு உட்படுத்துவதால்இடைவெளியெங்கும் ததும்பிக் கிடக்கும் சக்தி அதனுள்ளேகுடி கொள்ளுகிறது. அறிவைப் பலிஷயங்களிலே சிரத்தையுடன் செலுத்தி உழைப்பதனால் சக்தி உண்டாகிறது. இங்ஙனம் சிறிதுசிறிது ஏற்படும் சக்தியினாலேயேதான் உலகத்தில் மனிதர்கள்ஜீவித்திருக்கிறார்கள்.