பக்கம் எண் :

சமூகம் - ஓநாயும் வீட்டுநாயும்

தென் இந்தியாவிலுள்ள மன்னார்கடற்கரையை யடுத்த "ஒரு பெருங்காடு இருக்கிறது.அக் காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேககிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக்காரர்இருந்தார். அவர் பெயர் உக்கிரசேனப் பாண்டியன்.அவர் யுத்தப் பிரியர். அவர் புலி, கரடி, யானை, சிம்மம் முதலான காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் சமர்த்தர். பலவகையான வேட்டைநாய்கள் அவரிடத்தில் இருந்தன. அதிகாலையில் ஒருநாள் அவர் வேட்டைக்குப் புறப்பட்டார். தான் மிகுந்தஅன்பு பாராட்டி வளர்த்துவந்த ''பகதூர்'' என்ற ஒரு நாயைத் தன்கூட கூட்டிக்கொண்டு சென்றார். அந்தநாயானது வெகுகாலமாய் காட்டிலே இருந்தபடியால்அந்தக் காட்டில் யதேச்சையாய்ச் சுற்றித் திரிய சமயம்வாய்த்தவுடனே ஆனந்த பரவசப்பட்டு கண்டகண்டவிடத்திற்கெல்லாம் ஓடியது.

''பகதூர்'' பார்வைக்கு அழகாய் இருந்தது.மிகுந்த சதைக் கொழுப்பு அதற்குண்டு. அதன் உடம்புதினந்தோறும் கழுவப்பட்டு வந்ததால் தளதளப்பாய்இருந்தது. அக்காட்டில் ஓநாய்கள் விசேஷமாய் இருந்தன.ஓநாய் வேட்டை தன் அந்தஸ்துக்குத் தகாதென்பதுஉக்கிரசேனனுடைய கொள்கை. அக்காரணத்தாலேதான்அந்த ஆரண்யத்தில் ஓநாய்கள் நிர்ப்பயமாய் சஞ்சரித்தன.அன்று ஒரு ஓநாய் தன் வழியில் குறுக்கிட்ட ''பகதூரை''ப்பார்த்து அதிசயப்பட்டு அத்துடன் சம்பாஷிக்க விருப்பங்கொண்டது.

ஓநாய்:-  ஹே ஸகோதரா, நான் உன்னைச்சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன். எனக்குத்தயவுசெய்து விடைகள் அளிப்பாயா?

வீட்டு நாய்:-  அடா ஓநாயே, நாம் நம்முடைய அந்தஸ்துக்குக் குறைவான எந்த நாயோடும்ஸ்நேஹம் பாராட்டுவதில்லை. ஆயினும், உன்மேல்நம்மை யறியாமலே நமக்குப் பிரீதி ஏற்படுகிறபடியால்நீ கேட்கும் கேள்விகளுக்கு ஜவாப் சொல்ல ஸம்மதித்தோம்.