பக்கம் எண் :

ஓம் சக்தி - இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை

மக்கத்தை விட்டு, இளமையிலேயே இவர் வியாபாரத்துக்காக வெளி நாடுகளில் ஸஞ்சரிக்கும்படி நேர்ந்த ஸமயங்களில், யூத கிருஸ்தவபண்டிதர்களைக் கண்டு அவர்களுடைய மதக் கொள்கையைப்பற்றி விசாரணை செய்வது வழக்கம். அதனின்றும் விக்ர ஹாராதனை விஷயத்திலும் பல தேவர் வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதலில்லாமற் போக ஹேது உண்டாயிற்று. ஏகேசுவர மதத்தைக் கைக்கொண்டார். யூதருக்கும் கிருஸ்தவருக்கும் பொதுவாகிய "பழைய ஏற்பாடு" என்ற பைபிலின் பூர்வ பாகத்தை இவர் உண்மையாகவே அங்கீகாரம் செய்து கொண்டார். கிருஸ்தவ நாதரையும் இவர் ஒரு சிறந்த நபியாகக் கொண்டார்; கடவுளின்அவதாரமாக ஒப்புக்கொள்ளவில்லை. விக்ரஹங்களிடத்தே கடவுளைக் காட்டி வணங்குதல் பொருந்தாத கார்யமென்று யூதருக்கும் கிருஸ்தவருக்கு"ம் தோன்றியது போலவே, ஒரு மனிதன் பக்தி ஞானங்களில் எவ்வளவு சிறப்பெய்திய போதிலும்,அவன் கடவுளை நேருக்கு நேரே கண்டறிந்த வரையிலும், அதுபற்றி அவனை மிக உயர்ந்த பக்தனென்றும் முக்தனென்றும் போற்றலாமேயல்லாது, மனித வடிவத்தில் ஸாக்ஷாத் கடவுளையே சார்த்துதல் பொருந்தாதென்று முஹம்மது நபி எண்ணினார் போலும். இந்த அம்சத்தில் என்னுடைய சொந்தக் கருத்துப் பின்வருமாறு:-

இந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது; இது அசைகிறது; அண்டங்களாக இருந்து சுழன்றோடுகிறது; காற்றாகத் தோன்றி விரைகின்றது; மனமாக நின்று சலிக்கிறது; ஸ்தூல அணுக்களும் ஸுக்ஷ்ம அணுக்களும் ஸதா மஹா வேகத்துடன்,மஹா மஹா மஹா மஹா வேகத்துடன், இயங்கிய வண்ணமாகவேஇருக்கின்றன. இந்த உலகத்திலிருந்துகொண்டு இதனை அசைக்கிற சக்தியையே கடவுளென்கிறோம். எல்லாம் அவன். உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்.

அவனுடைய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம்யாது?  சைதன்யம் அல்லது சுத்தமான அறிவே கடவுளின் மூலரூபம். மனிதருடைய ஸாதாரணச் செயல்கள் யாவுமே கடவுளின் செய்கைகளே யன்றி வேறில்லை. எனினும், ஜகத்தில் ஞான மயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பதை நேரே ஒருவன் கண்ட பிறகு, அந்த மனிதனுடைய செயல்களிற் பல, கடவுளின் நேரான கட்டளையின்படி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலைமையை எய்தின மனிதனை நபி அல்லது தீர்க்கதரிசி என்கிறோம். அப்பால் அல்லா, எப்போதுமே ஒருவனுடைய ஹ்ருதயத்தில் அந்தக் கரணத்துக்கு நன்றாக விளங்கும்வண்ணம் குடி புகுந்து, கற்றறிந்தவனுடைய அறிவு முழுவதையும் தாம் விலை கொடுத்து வாங்கிய கருவி போலே ஆக்கி கொண்டு,புறச் செயல்களும் உலகத்தாருக்கு வழிகாட்டிகளாகும்படி பரிபூர்ணசைதன்ய நிலையிலே நடத்திக்கொண்டு வரத்திருவுளம் பற்றுவாராயின், அப்படிப்பட்ட மனிதனைக் கடவுளின் அவதாரமென்று சொல்லலாம். ஆனால், கிருஸ்துநாதர் இந்நிலை அடைந்ததாக முஹம்மது நபி நம்பவில்லை போலும். இது நிற்க.

இஸ்லாம் மார்க்கத்தின் முதலாவது கலீபாவாக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்தை ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார். அந்தக் காலத்திற்குப் பின்பு, முஸல்மான்களிலே, ஷியா, ஸுந்தி என்ற இரண்டு பிரிவுகள் உண்டாயின. குரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு, தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும், தாம் அதை ஒரு கருவிபோலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.