பக்கம் எண் :

ஓம் சக்தி - லோக குரு

சென்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி ஜப்பான் ராஜதானியாகிய டோக்கியோ நகரத்தில் ஸாம்ராஜ்ய ஸர்வ கலா சங்கத்தாரின் முன்பு ரவீந்திர நாதர் செய்த பிரசங்கம் பூமண்டலத்தின் சரித்திரத்திலே ஒரு புதிய நெறியைக் காட்டுவது. விவேகாநந்தர் செய்துவிட்டுப் போன தொழிலை வளர்ப்போரில் ரவீந்திரர் ஒருவர்.

விவேகாநந்தர் ஆத்மாவின் பயிற்சியை மாத்திரம் காட்டினார். ரவீந்திரர், 'உலக வாழ்க்கையும், உண்மையான கவிதையும், ஆத்ம ஞானமும் ஒரே தர்மத்தில்நிற்பன' என்பதை வெளி நாடுகளுக்குச் சொல்லும் பொருட்டாகப் பாரத மாதாவினால் அனுப்பப்பட்டிருக்கிறார்.

'பாரத தேசமே லோக குரு' என்ற செய்தி ஏற்கெனவே பல ஜப்பானியப் பண்டிதருக்குத் தெரியும். எனினும், நம்மவர் ஒருவர் நேரே போய் அந்த ஸ்தானத்தை நிலை நிறுத்துவதற்கு இதுவரை அவகாசப்படாமலிருந்தது. வங்காளத்து மஹா கவியாகிய ரவீந்திரநாத் தாகூர் போய் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார். இந்தத் தொழிலுக்கு அவர் மிகவும் தகுதியுடையவர் அவருடைய கவிதையின் கீர்த்தி பூமண்டல முழுதும் ஏற்கெனவே பரவி யிருக்கிறது. உலகத்து மஹா கவிகளின் தொகையில் அவரைச் சேர்த்தாய்விட்டது

'கீதாஞ்சலி' முதலாவதாக, அவர் இங்கிலீஷ் பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன; பார காவியங்களல்ல, பெரிய நாடகங்களல்ல; தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிர மணிகள் பத்துப் பன்னிரண்டு விற்றால், லக்ஷக்கணக்கான பணம் சேர்ந்து விடாதோ?  தெய்வீகக் கதையிலேபத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்படமாட்டாரோ?

கோபோ நகரத்தில் உயேனோ என்றதோர் பூஞ்சோலையிருக்கிறது. அதனிடையே அழகான பௌத்தக் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தச் சோலையிலே குளிர்ந்தமரங்களின் நிழலில் பல ஜப்பானிய வித்வான்கள் கூடி அவருக்குநல்வரவுப் பத்திரிகை படித்தார்கள். ஜப்பானிய ஸாம்ராஜ்யத்தில் முதல் மந்திரியாகிய ஒகூமாப் பிரபு என்பவரும், வியாபார மந்திரியாகிய ஸ்ரீமான் கோனோவும், கல்வி மந்திரியாகிய பண்டித தகாத்தாவும் வேறு பல பெரிய கார்யஸ்தர்களும் அந்தச் சபைக்குவந்திருந்தார்கள். நல்வரவுப் பத்திரிகை வாசித்து முடிந்தவுடனே, ரவீந்திரநாதர் பின்வருமாறு வங்காளி பாஷையில் பேசலானார்:-"எனக்கு ஜப்பானிய பாஷை தெரியாது. இங்கலீஷ் தெரியும்; ஆனால்அது உங்களுடைய பாஷையன்று. உங்களிடம் அந்தப் பாஷை பேச எனக்கு ஸம்மதமில்லை. மேலும், எனக்கே அது இரவல் பாஷை;ஆனபடியால் ஸரளமாக வராது. ஆதலால், வங்காளியிலே உங்களிடம் பேசுகிறேன்" என்றார். பண்டித கிமுரா என்ற ஜப்பானிய வித்வானொருவர் வங்கத்து மொழி தெரிந்தவராதலால் ரவீந்திர நதரின் வார்த்தைகளைச் சபையாருக்கு ஜப்பானிய பாஷையில்மொழிபெயர்த்துச் சொன்னார்.

பின்பு, ரவீந்திர நாதர் பேசுகிறார்:-  "கோபோ நகரத்தில் வந்து இறங்கியவுடனே எனக்கு ஜப்பான் விஷயத்தில் அதிருப்தியுண்டாகி விட்டது. எதைப் பார்த்தாலும் மேற்குத் தேசங்களின் மாதிரியாகவேயிருக்கிரது. ஜப்பானியர் தமது ஸ்வயமான தர்ம ஸம்பத்தை இழந்துவிடலாகாது" என்றார். இந்தக் கருத்தின் விவரத்தைப் பின்னே நாம் படிக்கப் போகிற டோக்கியோ ஸர்வ கலா ஸங்க உபந்யாஸத்திலே விஸ்தாரமாகக் காணலாம். அப்போது மஹா மேதாவியாகிய முதல் மந்திரி ஒகூமா எழுந்திருந்து ரவீந்திரருக்கு நன்றி கூறினார். ஸ்ரீமான் ஒகூமா கூறியது:- "எனக்கு இங்கிலீஷ் நேரே தெரியாது இவர் வங்காளி பாஷை பேசியதை நான் இங்கிலீஷ் என்று நினைத்தேன். நல்ல தருணத்திலே இவர் நமது தேசத்துக்கு வந்தார். நியாயமான எச்சரிக்கை கொடுத்தார். நமது தேசத்தின் சித்த நிலை இப்போது இரண்டுபட்ட பாதைகளின் முன்பு வந்திருக்கிறது. நமதறிவு எந்த வழியிலே திரும்புதல் தகும் என்பதை இப்போது நிச்சயிக்க வேண்டும். இத் தருணதில் நமக்கு நல்வழி காட்டும் பொருட்டாக இந்த மஹான் தோன்றினார்."