டோக்கியோ உபந்யாஸத்தைப் பற்றி ஒரு தனிப்பகுதி எழுத வேண்டும். "அதன் ஸாராம்சம்:- உறங்கின ஆசியாவை ஜப்பான் எழுப்பிவிட்டது. அதன் பொருட்டு நாமெல்லோருமஜப்பானுக்கு நன்றி செலுத்த வேண்டும். உறங்கும் பூமண்டலத்தை, பாரத நாடு தலைமையாக ஆசியா எழுப்பிவிடப் போகிறது.' இந்தக் கருத்தை ஜப்பானிய பண்டிதர் அந்நாட்டுப் பத்திரிகைகளில் அங்கீகாரம் செய்துகொண்டு மிகவும் அழகாக நன்றி வார்த்தைகள் சொல்லியிருக்கிறார்கள். டோக்கியோ ஸாம்ராஜ்ய கலாசங்கத்தில் பாரத கவி ரவீந்திரர் செய்த ஆச்சரியமான பிரசங்கத்திலே அவர் சொன்னதாவது:- "முதலாவது, உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். ஆசியா கண்டத்தில் பிறந்த எல்லா ஜனங்களும் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடன் பட்டிருக்கிறோம். எல்லாப் பந்தங்களைக் காட்டிலும் இழிவான பந்தம் உள்ளச் சோர்வு. இதனால் கட்டுண்டவர் தம் நம்பிக்கையில்லாதவர். கேட்டீர்களா, சிலர் சொல்லுவதை:- "ஆசியாக் கண்டம் பழமையிருளில் மூழ்கிக் கிடக்கிறது; அதன் முகம் பின்னே முதுகுப் புறமாகத் திருப்பி வைக்கப்பட்டிருக்கிறது"என்று. இப்படி வார்த்தை சொல்வோரின் பேச்சை நாமும் நம்பினோம். சிலர் இதையே ஒரு தற்புகழ்ச்சியாக்கி "அப்படித்தான்; நாங்கள் பழமையிலே தானிருப்போம். அதுதான் எங்களுக்குப் பெருமை" என்றார்கள். "விஷயங்கள் இந்த ஸ்திதியில் இருக்கும்பொழுது நாமெல்லாம் ஒரு மோஹ நித்திரையில் வீழ்ந்திருந்த காலத்திலே, ஜப்பான் தனது கனவு நிலைமை நீங்கி எழுந்தது; நடக்கத் தொடங்கிற்று; பூதாகாரமான அடியெடுத்து வைத்தது; நிகழ் காலத்தைஅதன் முடிவிலே போய்ப் பற்றிக் கொண்டது. எல்லோரும் தட்டி யெழுப்புண்டோம். 'பூமியின் மேலே, சில எல்லைக்குள்ளிருக்கும் சில தேசத்தாருக்கு மாத்திரம் முன்னேற்றம் வசப்படாது' என்ற மாயை போய்விட்டது. "ஆசியா கண்டத்தில் பெரிய ராஜ்யங்கள் ஸ்தாபனம் செய்திருக்கிறோம். பெரிய சாஸ்திரம், கலை,காரியம் - எல்லாம் இங்கே தழைத்தன. உலகத்திலுள்ள பெரிய மதங்களெல்லாம் இங்கே பிறந்தன. 'இந்த மனிதனுடைய சுபாவமே மதிச் சோர்வும் வளர்ச்சிக் குறையும் உண்டாகும்' என்று சந்தேகப் படவேண்டாம். பல நூற்றாண்டு நாம் நாகரிக நாகரிக விளக்கைத் தூக்கி நிறுத்தினோம். அப்போது மேற்குலகம் இருளில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குப் புத்தியுண்டு. நம்முடைய புத்தி ஒரு நத்தைப் பூச்சியில்லை. நம்முடைய கண் மாலைக் கண்ணில்லை. "ஆசியா, ஜப்பானுக்குக் கொடுத்தது அந்தப் பயிற்சி, ஜப்பான் இக்காலத்திலே புதியவளும் பழையவளுமாக விளங்குகிறாள். குல உரிமையால் கீழ்த்திசையில் நமது பழைய பயிற்சி அவளுக்குக் கிடைத்திருக்கிறது. 'மெய்யான செல்வமும் மெய்யான வலிமையும் வேண்டுமானால், ஆத்மாவுக்குள்ளே நோக்கத்தைச் செலுத்த வேண்டும், என்று கற்பித்த பயிற்சி, ஆபத்து வரும்போது பிரார்த்தனை தவறாதபடி காப்பாற்றும் பயிற்சி, மரணத்தை இகழச் சொல்லிய பயிற்சி, உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்த வேண்டும் என்று தெளிவித்த பயிற்சி, 'கண்ட வஸ்துக்களிலே, அகண்ட வஸ்துவைப் பார், என்று காட்டிய பயிற்சி. 'இவ்வுலகம் ஒரு மூடயந்திரமன்று. இதற்குள்ளேயே தெய்வ மிருக்கிறது; இது யதேச்சையாக "நிற்பதன்று; கண்ணுக்கெட்டாத தொலையில் வானத்திலிருக்கவில்லை; இங்கே இருக்கிறது அந்தத் தெய்வம்.' இந்த ஞானத்தை உயர்த்திய பயிற்சி: அநாதியாகிய கிழக்குத் திசையில் புதிய ஜப்பான் தாமரைப் பூவைப் போல் எளிது தோன்றி விட்டாள். பழைய மூடா சாரங்களை ஜப்பான் உதறித் தள்ளி விட்டாள்; சோம்பர் மனதிலே தோன்றிய வீண் பொய்களை மறந்து விட்டாள். நவீன நாகரிகப் பொறுப்புக்களைத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து வருகிறாள். |