ஜப்பான் இக்காலத்திலே புதியவளும் பழையவளுமாக விளங்குகிறாள். குல உரிமையால் கீழ்த்திசையில் நமது பழைய பயிற்சி அவளுக்குக்கிடைத்திருக்கிறது. 'மெய்யான செல்வமும் மெய்யான வலிமையும் வேண்டுமானால், ஆத்மாவுக்குள்ளே நோக்கத்தைச் செலுத்த வேண்டும், என்று கற்பித்த பயிற்சிஆபத்து வரும்போது பிரார்த்தனை தவறாதபடி காப்பாற்றும் பயிற்சி, மரணத்தை இகழச் சொல்லிய பயிற்சி, உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்தவேண்டும் என்று தெளிவித்த பயிற்சி, 'கண்ட வஸ்துக்களிலே, அகண்ட வஸ்துவைப் பார், என்று காட்டிய பயிற்சி'இவ்வுலகம் ஒரு மூட யந்திரமன்று. இதற்குள்ளேயே தெய்வ மிருக்கிறது; இது யதேச்சையாக நிற்பதன்று;கண்ணுக்கெட்டாத தொலையில் வானத்திலிருக்கவில்லை; இங்கே இருக்கிறது அந்தத் தெய்வம்.' இந்த ஞானத்தைஉயர்த்திய பயிற்சி: அநாதியாகிய கிழக்குத் திசையில் புதியஜப்பான் தாமரைப் பூவைப் போல் எளிது தோன்றி விட்டாள்.பழைய மூடா சாரங்களை ஜப்பான் உதறித் தள்ளி விட்டாள்; சோம்பர் மனதிலே தோன்றிய வீண் பொய்களை மறந்து விட்டாள். நவீன நாகரிகப் பொறுப்புக்களைத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து வருகிறாள். "ஜப்பான், ஆசியாவுக்குத் தைரியம் கொடுத்தது.உள்ளே உயிர் இருக்கிறது. நமக்குள் வலிமை யிருக்கிறது.மேல் தோல்தான் காய்ந்து போயிருக்கிறது. அதைக் கழற்றியெறிந்து விட்டு அதற்கு அப்பால் ஓடுகிற கால நதியிலேமுழுகி ஸ்நானத்தைப் பண்ணி யெழவேண்டும். தற்காலத்துக்குப் பயந்து, முற்காலத்திலே போய்த் தலையை நுழைத்துக் கொள்ளுவோன் உயிருந்த போதிலும் செத்தவனுக்குஸமானமே." இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். பழைய விதையிலே உயிர் ஸத்து நீங்கவில்லை. புதிய காலமாகிய வயலிலேயே நடவேண்டும். இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். ஜப்பான் பிறரைப் போல் வெளியபிநயம் காட்டி இந்தப் பெரிய ஸ்தானத்தை அடையவில்லை. பிறரைப் பார்த்து நாமும் அவர்களைப்போல்ஆகவேண்டுமென்று பாவனைகள் காட்டினால், வலிமையுண்டாகாது. பிறரிடம் சாஸ்திர ஞானம் வாங்கிக் கொள்ளுதல் வெளியபிநயம் அன்று. பிறர் கல்வியை நாம் வாங்கலாம்;கோணல்களை வாங்கக்கூடாது. தேசத்தாருக்கென்று பிரிவுபட்டதனித்தனிக் குணங்கள் பலவுண்டு. எல்லாத் தேசத்தாருக்கும்பொதுவான மானுஷீக குணங்கள் பலவுண்டு. பிறரிடம் ஒன்றைவாங்கிக்கொள்ளும் போது, ஸாவதானமாக வாங்கிக்கொள்ளவேண்டும்." ரவீந்திர கவியின் உபந்யாஸத்தை ஜப்பான் தேசத்தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களிலும் போய், பாரத தேசத்தின் அறிவு மஹிமையை மற்றொரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிறார் போலும். 'டோக்கியோ மானிச்சி' என்ற ஜப்பானியப் பத்திரிகைசொல்லுகிறது:- "அறிவில் ஜப்பான் பாரத தேசத்திற்குக் கடன்பட்டிருக்கிறது. ஜப்பான் நாகரீகம் பெறாதிருந்த காலத்தில்,பாரததேசம் அதில் உயர்ந்திருந்தது. பாரத ஞானம் பூ மண்டலமமுழுவதையும் தீண்டியிருக்கின்றது. 'ப்லாத்தோ'வுக்கு உபதேசம்பாரததேசத்திலிருந்து கிடைத்தது. ஸ்வேதன் போர்க் ஸாபன் ஹோவர் என்ற பிற்காலத்து ஞானிகளும் பாரத தேசத்தின் அறிவுக்கு வசப்பட்டார். பாரத நாகரீகம் நமக்குச் சீனா, கொரியா வழியாக வந்தது. நாம் இந்தியாவின் கடனைத் திரும்பக் கொடுக்க வேண்டும். ரவீந்திர நாதரை நாம் மிகவும்கௌரவப் படுத்த வேண்டும்." |