பக்கம் எண் :

ஓம் சக்தி - அடங்கி நட

தனக்குத்தானே நாயகனாயிருக்கும் உரிமைஎல்லா மனித உரிமைகளிலும் பெரிது. ஆனால் இந் நாட்டிலே இவ்வுரிமை, நூல் வசனங்களாலும், பழமொழிகளாலும், கிரியை சடங்குகளாலும் மறுக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தேசத்தில் மனிதனுடைய புத்தி வழிதவறிப் போகாமலிருக்க, கிரியைகளாலும் சாஸ்திரங்களாலும் கையையும் காலையும் கட்டிப் போட்டிருக்கிறார்கள். அடிகோணாமற் காக்குமாறு, பாதைகளை அழித்து விட்டார்கள். தெய்வத்தின் பெயர் சொல்லி மனிதனை மனிதன் கீழ்ப்படுத்தி அவமதிக்கும்படிசெய்து விட்டார்கள். இப்படிப்பட்ட தேசம் அடிமைகளைச்செய்வதற்கு நல்ல தொழிற்சாலையாயிற்று.

ஸர்க்கார் அதிகாரிகளும் அப்படியே சொல்லுகிறார்கள்:-  "நீங்கள் பிழை செய்யக் கூடும். ஆதலால் சுயசிந்தையும், சுய காரியமும் உங்களுக்குத் தகாது"என்கிறார்கள். இங்ஙனம், மனுபராசராதிகளுடைய பல்லவியை இங்கிலீஷ்காரர் பாடும்போது நமக்கு செவி கூசுகிறது. இங்கிலீஷ்காரரிடம் அவர்களுடைய கொள்கைக் கிணங்கப் பின்வரும் மறுமொழி சொல்லுகிறோம்; 'பிழை செய்தால் பெரியஆபத்தில்லை. தனக்குத்தானே நாயகனாயில்லாதிருத்தல் பெரிய ஆபத்து. நம்மிஷ்டப்படி இடறி நடந்து பழகினாலொழிய நாம் உண்மைக்கு வந்து நிலைபெற முடியாது" என்கிறோம். பின்னும் சொலுகிறோம்: நம்மை ஆளுவோர் இப்போது 'ஜனாதிகாரம்' என்ற மோட்டார் வண்டியில் ஏறிப்போகிறார்கள்.ஆனால் இவர்களுடைய பழைய பார்லிமெண்ட் சபையாகிய வண்டி இரவில் பயணந் தொடங்கிய காலத்தில் ஒரு வழக்கத்திலிருந்து மற்றொரு வழக்கத்திற்கு மாறினபோது, அதன் இரைச்சல் வெற்றித்தேர்போலே கேட்கவில்லை. ஒரு வேளை ராஜாவின் சார்பு; பின்பு கோயிற் கக்ஷி; பின் ஜமீன்தார்கக்ஷி; பிறகு சாராயம் வடிப்போர் கக்ஷி; இங்ஙனம் கக்ஷி பேதமும், லஞ்சம் வாங்குதலும், கூச்சலும் சக்திஹீனமும் உடையதாய், அந்த வண்டி பக்கத்துக்குப் பக்கம் சரிந்து சரிந்துநடந்தது. ஒரு காலத்தில் அந்தச் சபை 'மெம்பர்கள் கூட்டத்துக்குவராவிட்டால் தண்டனை உண்டென்று பயமுறுத்தி அழைக்க "நேரிட்டதன்றோ? பிழைகளைக் குறித்துப் பேசுமிடத்தில் 'பார்லிமெண்ட் சபைகளின் தாய்' என்று சொல்லப்படும் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் சபை முன்பு அமெரிக்காவிலும், ஐர்லாந்திலும் செய்த பிழைகள் முதலாக, நேற்று 'டார்டனென்ஸ்,' 'மெஸொபொட்டேமியா' விஷயமாக எத்தனையோ பிழைகள்செய்யவில்லையா?  இந்தியாவில் செய்திருக்கும் பிழைகள் கொஞ்சமா?  மேலும் அமெரிக்கா ராஜ்யத்தில் பொருளாளிகள்நுழைந்து செய்யும் அக்கிரமங்கள் கொஞ்சமில்லை. 'த்ரெய்புஸ்'என்றவர்மேல் ஏற்பட்ட விசாரணையிலே, பிரான்ஸ் தேசத்து ராணுவ ஊழல்கல் வெளிப்பட்டன. ஆயினும், "ஸ்வராஜ்யமென்கிற ஜீவநதியானது எந்த வேகத்தால் பிழையாகிறகுழியிற் போய்விழுகிறதோ அதே வேகத்தால் அங்கிருந்து கிளம்பித் தனக்கேற்படும் இடறுகளைத் தானே நீக்கிக்கொள்ளும்'என்ற விஷயத்திலும் அத்தேசங்களிலேயுள்ள ஜனங்கள் சந்தேகப்படவில்லை."