இதற்குப் பெயர் 'ஸனாதன தர்ம புனர் உத்தாரணம் என்கிறோம். ஸனாதன கக்ஷித் தலைவர் நாம் ஒரு கண்ணால் உறங்கி மற்றொரு கண்ணால் விழித்திருக்கும்படி அஸாத்ய உத்தரவு போடுகிறார்கள். கடவுளுடைய கோபமாகிய கழி நம் முதுகின்மேல் அடிக்கும்போதும், தேசாபிமானத்தால் மனம் புண்ணாகி,"மூங்கிற் காடுகளை எல்லாம் வெட்டிப் போடுவோம்" என்றுகூவலானோம். நாம் எத்தனை வெட்டினாலும் மூங்கிற்காடு உலகத்தில் மிஞ்சி இருக்கத்தான் செய்யும். காடென்ன செய்யும்?குற்றம் நமது. அது யாதெனில்:- நாம் உண்மையைவிட அதிகாரம்மேல் என்று மதிக்கிறோம். கண்ணைக் காட்டிலும் தோல் முகப்படாம் மேல்' என்று நினைக்கிறோம். நாம் இந்தக் குணத்தை நீக்கும் வரை, ஏதேனும் ஒரு காட்டில் நம்மை அடிக்க யாதேனும் ஒரு கழி மிஞ்சி இருக்கத்தான் செய்யும். ஐரோப்பாவிலும் முன்ஒரு காலத்தில் எல்லா விவகாரங்களிலும் பாதிரிகளுடைய அதிகாரம் மூர்த்தன்யமாய் நடந்தது. எங்கும் வீசி இருந்த பாதிரிவலையை அறுத்தபிறகுதான், ஐரோப்பிய ஜனங்கள் ஸ்வராஜ்யப்பாதையிலே கால் வைக்க இடம் உண்டாயிற்று. இங்கிலாந்து மாத்திரம் தீவானபடியாலும் கோயிலின் ராஜதானியாகிய ரோமாபுரியிலிருந்து மிகத் தூரம் ஆனபடியாலும் பிழைத்தது. இங்கிலாந்திலும் கோயில் (சர்ச்) அதிகாரம் முற்றிலும் நசித்து விடவில்லை. 'இங்கிலீஷ் கோயில்' பாட்டியைப் போல் முன் நடத்திய ஸர்வாதிகாரம் நீங்கி இப்போது இரக்கத்தால் அதுவும்இருந்து போகட்டுமென்று விடப்பட்டிருக்கிறது. இங்ஙனம் 'மாமூல் கிழவி'யை இங்கிலாந்து தேசத்தார் அசைத்தது போலவே, ஸ்பெயின் தேசத்தார் செய்யக்கூடவில்லை. முன்னொரு காலத்தில் ஸ்பெயின் தேசத்தார் பாடுமிகவும் கொண்டாட்டமாக இருந்தது. அந்த அநுகூலத்தை அவர்கள் ஏன் இழந்தார்? 'மாமூல் கிழவி'க்கு மணியம் கொடுத்தமையாலேதான். ஸ்பெயின் தேசத்து பிலிப் ராஜா இங்கிலாந்தின் மீது சண்டை தொடுத்த காலத்தில், ஸ்பெயின்தேசத்துக் கப்பற் படை விவகாரங்களும் கோயில் விவகாரங்களைப்போலவே வலிய தளைகளுக்கு உட்பட்டிருந்தமை வெளியாயிற்று.இங்கிலீஷ் கப்பற் படையோ மிகச் சிறந்த சேனாதிபதிகளின் கீழே,தான் மிதக்கும் கடலலைகள் எப்படி விடுதலைகொண்டு வீசும் காற்றுக்கு ஒத்துச் சொல்லுமோ அதுபோல தானும் சென்றது. ஸ்பானியக் கப்பற்படையில் ஜாதிமரபுப்படி அதிகாரம் வகுத்திருந்தது. அது அசையாத மாமூலின் இரும்புப்பிடியினின்றுவிலக வழியில்லாமல் போயிற்று. இங்ஙனம் ஐரோப்பாவில் கோயிற்கட்டுக்குக் குருட்டுத்தனமாகக் கீழ்ப்பட்டிருந்த தளையைவெட்டித் தன் மதிப்பைக் காக்கக் கற்ற ஜாதியாரே தலைதூக்குவது இயல்பாயிற்று. ருஷ்யாவில் அவ்வாறு செய்யாத படியால், அங்கே உத்தியோகஸ்தர் காடாகப் பரந்து, ஜனங்கள்மிகச் சிறிய சர்க்கார் அதிகாரிக்கும் மிகவும் அற்பமான பழஞ்சாஸ்திரக் கட்டளைக்கும் முழந்தாள் படியிட்டு ஆண்மை இழந்துபோகின்றனர். |