பக்கம் எண் :

ஓம் சக்தி - கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

இம் மஹா பாதகர்களால் நம் தேசத்திறகுவிளையும் தீமைகள் கணக்கில் அடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள்செல்லக் கூடாத மார்க்கங்களிற் சென்றுவிடுகிறார்கள். நமக்குகொள்கை வேண்டுமே யல்லாது ஆள் வேண்டியது அவசியமில்லை. ஒருவன் தான் பறையறையும் நல்லதோர் கொள்கையை விட்டுவிட்டு விலகி நடப்பானானால் அப்பொழுது நாம் அவனைக் கொண்டாடுவது மதியீனம். அவனை எவ்வகையாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும். தான் குடிக்கும் காபிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆடைக்காகவும் ஒருவன்தன்னுடைய அருமையான கொள்கைகளைக் கைவிடுவானானால்,அவனை மானிடரால் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனிலும் பதரான மனிதன் ஒருவன் இருக்கமுடியாது. அவன்சம்பந்தப்பட்ட மட்டில், கொள்கைக்கும் செய்கைக்கும் வெகுதூரம் உண்டு.

பாரத தேசத்தாராகிய நாம் சகலவிதமான சுதந்திரங்களையும் இழந்து எங்கேயோ யிருந்துவந்த ஒரு வெள்ளை நிற ஜாதியாருக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். நாம்முப்பது கோடி ஜனங்கள். அவர்கள் இரண்டு லக்ஷங்கூட இல்லை.உலகத்தோர் எல்லோரும் இதை எங்கு எக்காலத்திலும் இல்லாதஅற்புதம் என்று நினைக்கிறார்கள். இதனால் உலகத்திலுள்ள மற்றஜாதியார்கள் நம்மை (முப்பது கோடி அல்லது மூவாயிரம் லக்ஷம்ஜனங்களையும்) அடக்கி ஆளும் ஆங்கிலேயர்களை மகாவீரசூரர்களென்றும், ஒப்பற்ற பலிஷ்டர்களென்றும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அதற்குப் பதிலாய், நம்மிடத்தில் அவர்களுக்கு அவ்வளவுக்கவ்வளவு வெறுப்பும் மதிப்புக் குறைவும் ஏற்பட்டு விடுகிறது. இந்தியன் எங்கே போனாலும்நிந்திக்கப் படுகிறான். யாரும் நம்மீது காறித் துப்புகிறார்கள்.உலகத்தோர 'இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர்மட்டுமல்ல, வேறே எந்த ஜாதியாரும் இலேசாக ஆளலாம்.என்று நம்பியிருக்கிறார்கள். அப்படியிருக்க, நாம் மிகுந்த அந்தஸ்துக்களைப் பாராட்டினால் அது ஒவ்வா ஒழுக்கம். நாம்சுயாதீனம் அடைந்தபிறகு மீசை முறுக்கலாம். இப்பொழுது வீண் டம்பங்களைச் செய்தால் எல்லோரும் நகைப்பார்கள்.

நம்மில் ஒவ்வொரு புருஷனும் ஒவ்வொரு ஸ்திரீயும்ஏற்றுக்கொள்ள வேண்டிய கொள்கை ஒன்றேதான் உண்டு. அதாவது, நம்முடைய அருமை நாட்டில் சுயாதீனத்தை நாட்டிப்பிறர் அஞ்சி மதிக்கும்படியாக நாம் ஜீவிக்கவேண்டியது. இந்தக்கொள்கைப்படி நடக்க என்ன இடையூறுகள் வந்தாலும் இவற்றைநாம் விலக்கிக் கொண்டு போக வேண்டும். இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து நடப்பதில் எவ்விதமான சுகத்தையும், மரியாதையையும் அந்தஸ்தையும் இச்சிக்கப்படாது. வீடு, வாசல், மனை மக்கள், எல்லோரையும் இழக்கும்படி நேர்ந்தாலும் இழந்தே தீரவேண்டும்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்      எவ்வவர் தீமையு மேற் கொள்ளார் - செவ்வி      அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்வார்      கருமமே கண்ணா யினார்,

என்ற மூதுரைக்கு இணங்கியே நாம் நடக்க வேண்டும். இவ்வாறு நடக்க முடியாதவன் தான் பேடியென்று ஒப்புக்கொண்டு பின்னடையவேண்டும். நானும் ஸ்வராஜ்யக் கொள்கையுள்ளவன் என்று முன்வந்து நிற்கவேண்டாம். சுதந்திரக் கொள்கையை உடையவன் தன்ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்துவிடச்சித்தமாயிருக்கவேண்டும், ஹோ பரதா! சோம்பலுள்ளவனுக்கு எவ்விதக் கொள்கையும் ஏற்காது மழையென்றும், வெய்யிலென்றும், காற்றென்றும், பசியென்றும், தாகமென்றும், நித்திரையென்றும் பாராட்டாதே, இந்தச் சரீரமே அநித்தியம் "என்றால்,அதையொட்டிய அவஸ்தைகள் நித்தியமாகுமா?  இந்திரியஅவஸ்தைகளுக்கு அஞ்சியாவது இந்திரிய சுகங்களைக் கோரியாவதுதேசிய தர்மத்தைக் கைவிடாதே. பிரம்மமே நித்தியம், சத்தியாமஜெயம். நீயும் அடிமைத் தனத்திலிருந்து நீங்கவேண்டும். உன்னுடைய ஜய பேரிகையை அடித்துக் கொண்டு உலகத்தில்எந்தெந்த பாகத்தில் யார் யார் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அவரவரை விடுவிக்க வேண்டும். உன் செயலால் பாரதமாதா முன்போல் உலகத்திற்குத் திலகமாய் ஜ்வலிக்க வேண்டும். இந்தக் கொள்கைகளைக் கைவிடாதே. கைவிடாதே, கைவிடாதே. முக்காலும்சொன்னோம்.

வந்தேமாதரம்.