‘ஓ’ என்னும் ஒலிக்குறிப்பு வேர்ச்சொல் ஊ- ஓ. உரத்த ஓசையைக் குறிக்கும் எழுத்தொலி அல்லது ஒலிக்குறிப்பு ‘ஓ’ என்பதாகும். “ஓவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே” (சீவக. 1843) ஓ - கோ, ஓ - சோ. கோவென்றலறினான், சோவென்று மழை பெய்தது என்பன உலக வழக்கு. சேய்மை விளிக்குச் சிறந்த ஒலி ஓகாரமே. எ - டு : அண்ணோ!, ஓ அண்ணா! ‘ஓல்’ என்பத ஈற்று விளியுருபாகும். எ - டு : சாத்தா வோல்! இலக்கணஞ் சாரா உலக வழக்கில், ஓகாரஅடிப் பிறந்த ஓர் அசையும் அதன் திரிபும் தனி விளியொலிகளாகும். அவையாவன ஓய் - வேய் - வே. கதிர் முற்றிய நிலங்களிற் படிந்துண்ணும் பறவைகளை ஓவென்று கத்தி ஓட்டுவதால், பறவையோட்டுதல் ஓப்புதல் எனப்பட்டது. “கழனிப் படுபுள் ஓப்புநர்” (புறம். 29 13) ‘ஓ’ என்பது ஓர் ஒலிக்குறிப்பாதலால், ஓல் என்பது ஒலிப் பெயராயிற்று. ஓலுறுதல் - ஒலிபெறுதல். “ஓலுறு பெருக்கின்” (இரகு, நகர. 42) |