ஓல் - ஓலம் = 1. ஓசை (பிங்.). 2. என்றும் ஓசையிடும் கடல். 3. அடைக்கலம் வேண்டும் கூக்குரற்சொல். “ஞானநா யகனே ஓலம்” (கந்தபு. சூர. வதை. 460). Te. ola, M. olam. ஓலோலம் - ஆலோலம் = ஓவெனக் கத்திப் பறவைகளைத் துரத்தும் குறிப்புச் சொல். “பூவைகாள் செங்கட் புள்ளினங்காள் ஆலோலம்” (கந்தபு. வள்ளி, 51) லேலோ எனப் பாடிக் குழவியைத் தூங்கவைத்தல், இலக்கணஞ்சாரா உலக வழக்கில் லோலாட்டு எனப்படும். லோலாட்டு - ஓலாட்டு = தாலாட்டு. ஓல் = தாலாட்டு. “ஓலுட னாட்டப் பாலுடனுண்டு” (இறை. 2, உரை) ஒ. நோ : ரோரோ - ரோராட்டு - ராராட்டு - ஆராட்டு = தாலாட்டு. லாலாட்டு - தாலாட்டு. லால் - தால். ஒ - சோ. சோ என்பது விலங்கு பறவைகளைத் துரத்தும் குறிப்பசை. ஒப்பு - சோப்பு. சோப்புதல் = ஈயோட்டுதல். ஈச்சோப்பி = ஈயோட்டும் கருவி. அரசன் கொலுவீற்றிருப்பைக் குறிக்கும் ஓலக்கம் என்னும் சொல், ஒல்லகம் (=கூடுமிடம்) என்பதன் திரிபன்றாயின் ஓலகம் (=ஆரவாரமான இடம்) என்பதன் திரிபாகவேயிருத்தல் வேண்டும். ஓல் - ஓலகம் - ஓலக்கம். Te. olagamu. K., Tu. olaga, Molakkam. ஒட்டோலக்கம் = 1. பேரவை. 2. ஆரவாரம். Te. oddolagamu, K. oddolaga. ஒட்டோலக்கம் - அட்டோலக்கம் = 1. ஆரவாரம். 2. உள்ளக்கிளர்ச்சி. ஓல் - ஓது. ஒ. நோ : மெல் - மெது. K., Tu., M. odu. |