பக்கம் எண் :

29

5

‘உ’ என்னும் வேர்ச்சொல்

(உகரச்சுட்டு)

முன்மைச்சுட்டு

உ (முன்மைக் கருத்து வேர்)

உகரத்தை ஒலிக்குங்கால், இதழ் குவிந்து முன்னோக்குவதால், உகரச்சுட்டு, முதற்கண் பேசுவோனின் முன்னிடத்தைக் குறித்தது.

உதுக்காண் = என்முன் பார்!

உதா, உதோ

உந்தா, உந்தோ = என் முன்னே!

உதோள், உதோளி = எனக்கு முன்னிடத்தில்.

உந்த = எனக்கு முன்னுள்ள.

உங்கு, ஊங்கு = எனக்கு முன்.

உவன் = எனக்குமுன் நிற்பவன்.

இங்ஙனமே, உவள், உவர், உது, உவை என ஏனைப் பாலிலும் ஒட்டுக.

உகரச்சுட்டு தமிழ்நாட்டில் வழக்கற்றது. ஆயினும், யாழ்ப்பாணத்தில் வழங்குவதாகத் தெரிகின்றது. இது குடியேற்றப் பாதுகாப்பு என்னும் நெறிமுறைப்பட்டது.

முன் என்னும் சொல் முன்னிடத்தையும், முற்காலத்தையும் உணர்த்துவதுபோல், உகரச்சுட்டும் உணர்த்தும்.

ஊங்கு = முன்பு.

“உணரா வூங்கே”              (குறுந். 297)