பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

11

‘உள்’ என்னும் வேர்ச்சொல்

உள் (துளைத்தற் கருத்து வேர்)

உ - உல் - உள்.

உள் என்பது ஈண்டுத் துளைத்தற் கருத்துள்ள வேர்ச்சொல்.

உல் = 1. தேங்காயுரிக்கும் கூரிய கருவி. 2. கழு. துளைத்ததற்குக் கூரிய கருவி வேண்டும்.

உல் - இல் - இல்லி = துளை, சிறுதுளை.

இல் = துளைபோன்ற சிறு வீடு, வீடு.

ஒ.நோ. புரை = துளை, அறை, வீடு.

இல் - இல்லம் = பெருவீடு, வளமனை. ‘அம்’ பெருமைப் பொருட் பின்னொட்டு. ம. இல்லம்.

உல் - உர் - உரல் = உலக்கையாற் குத்துதற்கேற்ற குழியுள்ள கல். ம. உரல், து. ஒரல், க. ஒரளு, தெ.ரோலு.

உல் - உலை. உலைதல் = உட்குலைதல்.

உள்ளிறங்குமாறு குத்துதலும் ஒருவகைத் துளைத்தல். அங்ஙனங் குத்துங்கருவி கூராயிருத்தல் வேண்டும்.

உல் - உள் - உளி. உள் - அள் = கூர்மை. அள் - அளி = குத்தும் உறுப்புள்ள ஈ, தேனீ, குளவி, வண்டு. அளி - வ. அலி.

உள் - உளி = கூரிய பல்வேறு கருவி.

ம., க., து. உளி; தெ. உலி. உளி - உசி - ஊசி.

ஒ. நோ : இளி - இசி.

ஊசி = கூர்மை. கூரிய தையற்கருவி, எழுத்தாணி, கழு, துலைமுள், இருப்பு நெருஞ்சில், குயவர் மட்கலம் அறுக்குங் கருவி, சிறுமை.