பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

உள் - உள்ளி = நிலத்திற்குள்ளிருக்கும் பூண்டுவகை.

ம., து. உள்ளி,தெ. உல்லி.

உள் - உளவு = உள்ளிருந்து துப்பறிதல். உளவு - உளவன் = துப்பாள். து. உளவு; க., தெ. ஒலவு.

உளகு = உட்டுளையுள்ள யாழின் தண்டு.

உளகன் = உட்பட்டவன்.

“பல்லினைக்கே யுளக ரெல்லாம்”      (திருநூற். 61)

உளர்தல் = உட்கிளைத்தல், குடைதல், கோதுதல்.

உளம்புதல் = புதரைத் தட்டி வேட்டை விலங்கைக் கிளப்புதல்.

“கைம்மா வுளம்புநர்”          (கலித். 23)

உளைதல் = உட்குடைதல். ம.உள.

உளை - உளைவு, உளைச்சல்.

உளு - உழு - உழுதல் = நிலத்தை மேனாக்காகத் துளைத்தல்.

ம., க. உழு, து. ஊட் (ud).

உழு - உழவு - உழவன்.

உளு - உகு. உகுதல் = உள்ளிருந் தொழுகுதல், சுரத்தல், சிந்துதல், சிதறுதல், உதிர்தல், தேய்தல், குலைதல், கெடுதல், சாதல்.

உகு - உகை. உகைத்தல் = உள்ளழுத்துதல், பதித்தல். க. ugu.

“நீலமொன் றுகைக்கு நிறைந்த கணையாழி”     (பணவிடு. 97)

உகு - (உகள்) - அகள் - அகழ். அகழ்தல் = தோண்டுதல் க. agal (அகழ்).

அகழ் = 1. அகழி. க. agal (அகழ்). “வையையும் ஒருபுறத் தகழாம்” (திருவிளை. திருநகரப். 17). 2. குளம். “நீர் நசைஇக் குழித்த வகழ்” (பெரும்பாண். 108).

அகழ் - அகழி. க. agalu (அகழு), தெ. அகட்த (agadta).

அகழான் = அகழெலி

அகள் - அகடு = 1. உள். “செழுந்தோட் டகட்டின் அடைகிடக்கும்” (கூர்மபு. தக்கன்வே. 57). 2. வயிறு. தெ. கடுப்பு. “அகடாரார்” (குறள். 936). 3. நடு. “மதிபகடு தோய்” (தாயுமா. சச்சி. 6). 4. நடுவுநிலைமை. “அகடுற யார்மாட்டும் நில்லாது” (நாலடி. 2).