“வார்தல் போதல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள” (தொல். 800). 3. நீள்தல் போற் காலால் நடத்தல், வண்டி செல்லுதல். ஒ.நோ நெடு - நட. கம்பியை நீட்டிவிட்டான் என்னும் வழக்கையும் நோக்குக. 4. ஒழுக்க முறையில் நடத்தல். ஒழுகு - ஒழுக்கு - ஒழுக்கம் - நடை, செலவு, நடத்தை, வரிசை. ஒழுகு = நிலம், கோயில் முதலியவற்றின் ஒழுங்கான வரலாறு அல்லது கணக்கு. “நாடு பிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி” (திவ். திருமலை. 3, வியா.) கோயிலொழுகு = கோயிலுடைமை வரலாறு. ஒழுகு - ஒழுங்கு - ஒழுங்கல் = ஒழுங்காயிருக்கை. ஒழுகு - ஒழுகை = 1. வண்டி. “உப்பொ யொழுகை யெண்ணும்” (புறம். 116). 2. வண்டி வரிசை. “பெருங்கயிற் றொழுகை” (பெரும்பாண். 64). ஒழுங்கு - ஒழுங்கை = 1. நீண்ட இடைகழி. 2. மண்டப நடை, முகப்பு. ஒள் - ஒளி. ஒளிதல் = துளைக்குள் அல்லது பள்ளத்துள் மறைதல். ஒளி - ஒழி - ஒழிதல் = மறைதல், நீங்குதல், சாதல். ஒ. நோ : மாய்தல் = மறைதல், இறத்தல். ஒழி - ஓய். ஒ.நோ வழி - வாய். ஓய்தல் = வேலையொழிதல், மரங் காய்ப்பொழிதல். கால் வலிமையொழிதல். ஓய்வு - ஓவு - ஓ = ஒளிவு, சென்று தங்குகை, ஒழிவு. உள் - உடு - அகழி (பிங்.). உடு - உடுவை = அகழி, நீர்நிலை. உடு - ஊடு = துளைவழி, வழி. ஊடு - ஊடை = நெசவின் குறுக்கிழை. உள் - உரு - உருவு. உருவுதல் = துளையூடு செல்லுதல், மூடின 1. நடைபாதையை ஒழுங்கை என்பது தஞ்சை வழக்கு. |