பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

அவ்விரு முதலுக்கும் பின்வருமாறு வேறுபாடு காட்டித் தமிழைப் பண்படுத்தி யுள்ளனர்.

யாம், யாங்கள் = தனித் தன்மைப் பன்மை அல்லது படர்க்கை யுளப்பாட்டுத் தன்மைப் பன்மை.

நாம், நாங்கள் = முன்னிலை யுளப்பாட்டுத் தன்மைப் பன்மை.

இக்கால வழக்கில், ‘யாங்கள்’ என்னும் சொற்குப் பகரமாக (பதிலாக), ‘நாங்கள்’ என்பது தவறாக வழங்கிவருகின்றது. இதற்கு யாவடிச்சொல் வழக்கற்றுப் போனதே காரணம். தன்னையும் தன்னோடிருக்கும் பிறரையும்மட்டும் சேர்த்துக் குறிப்பது தனித் தன்மைப் பன்மையாம்.

நாம் என்னும் பெயரினின்று ‘ஆம்’ ஈறு தோன்றியுள்ளது. அது ‘அம்’ என்று குறுகவுஞ் செய்யும். இவ் விரண்டும் தன்மையொடு முன்னிலையை உளப்படுத்தும்.

எ - டு : நாம் வந்தாம்.

    நாம் வந்தம், நாம் வந்தனம்.

‘ஆம்’ ஈறு ‘ஓம்’ என்றும் திரியும். இது செய்யுள் வழக்கில் படர்க்கையையும், யிரண்டையும், உளப்படுத்தும்.

எ - டு : யாம் (நானும் அவனும், நானும் அவரும், யாமும் அவனும், யாமும் அவரும்) வந்தோம் - செய்யுள் வழக்கும் உலக வழக்கும்.

நாம் (நானும் நீயும், நானும் நீரும்) வந்தோம் - உலக வழக்கு.

“அம்ஆம் என்பன முன்னிலை யாரையும்
எம்ஏம் ஓம்இவை படர்க்கை யாரையும்
உம்ஊர் கடதற இருபா லாரையும்
தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை”    (நன். 332)

“உம்ஊர் கடதற” (கும், டும், தும், றும்).

ஏகாரவடியினின்று தோன்றாமையால் இங்குக் குறிக்கப் பட்டில.

2. (வினாச் சொல்லடி)

ஏ = எந்த. எ - டு : ஏவூர் = எந்த வூர். இது தெலுங்க வழக்கு. இப் பெயரெச்ச வழக்கு இற்றைத் தமிழில் அற்றது.