பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

சுரங்கம் - சுரங்கா (வ.).

சுர் - சுரி. சுரித்தல் = துளையிடுதல்.

சுரி = 1. துளை (திவா.). 2. ஏட்டுத்துளை. ம. சுரி. 3. ஏட்டில் துளையிடுங்கருவி.

சுரியூசி = ஏட்டில் துளையிடுங் கருவி.

இச் சொல் முந்தின குத்தற்பொருட் கட்டுரையிலும் குறிக்கப் பட்டது. குத்தலும் துளைத்தலும், கலத்தை நீர்மேல் வைத்தலும் அதற்குள் முழுக்குதலும் போன்ற, நெருங்கிய அல்லது அடுத்து நிகழும் வினைகள் என்றறிதல் வேண்டும். அதனால், ஒரே சொல் இரண்டையுங் குறிக்கும். ஆயினும், கருவி வேறுபாட்டால் வினை வேறுபடும். கையினால் முதுகிற் குத்துவது தொடுதலின் பாற்பட்டது; கத்தியினால் அதில் அல்லது வேறுறுப்பிற் குத்துவது துளைத்தலின் பாற்பட்டது. ஆதலால், துளைக்குங் குத்தல் வினைச்சொற்க ளெல்லாம் இக்கட்டுரைக்கே யுரியவையெனப் பிரித்துணர்க. குடைச்சற் கருத்தைக் கொண்ட சூலைநோய்ப் பெயரும், அணிவகைத் துளைத்தலைக் குறித்தலால் இக் கட்டுரைக்கே யுரியதாகும்.

சுர் - சுரு - சுருங்கு = சாய்கடை (gutter) (பிங்.).

சுருங்கு - வ. சுருங்கா.

சுருங்கு - சுருங்கை = 1. நுழைவாயில் (பிங்.) 2. மாளிகையின் சாளரம். “மாடமேற் சுருங்கையிலிருந்து ...... மாநகரணி பார்த்திடும்’’ (சீகாளத் பு. நக்கீர. 30). 3. புதைசாலகம். “பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி’’ (மணிமே. 12 79). 4. கோட்டையில் மறைவான கீழ்நில வழி. (சூடா.). “போக வமைத்த பொய்ந்நிலச் சுருங்கையுள்’’ (பெருங். 2 17 94).

சுருங்கை - வ. சுருங்கா.

ஒ.நோ : Gk. surigx, surigg = குழாய். L., E. sgrinx = நாணற்குழல். L. siringa, E. syringe = உறிஞ்சி (உறிஞ்சுகுழாய்).

சுரு - சுருவம் = 1. அகப்பை வகை (அக. நி.). 2. நெய்த்துடுப்பு. “சீரைச் சுருக்குச் சுருவமெலாம்’’ (உத்தரரா. அனுமப். 41).

சுருவம் - வ. ஸ்ருவ.

சுரு - சுருவை = நெய்த்துடுப்பு. “அந்தணாளர்க்குச் சுருவையும்’’ (தொல். பொருள் 629, உரை).

ஒ.நோ : முள் - முழு - முழுகு. முழு - மூழை = அகப்பை. முழுகுதலும் துளைத்தல் வகையே.