தெண்டுதடி = நெம்புதடி. தெண்டு - தெண்டில் = தலையை நெம்புவதுபோல் மேலுங் கீழுமாக அலைக்கும் ஓணான். தென் - தெறு - தெற்று. தெற்றுதல் = 1. மாறுபடுதல். 2. முறுக்கிக்கொள்ளுதல். “தெற்றுகொடி முல்லையொடு’’ (தேவா. 622:6). 3. இடறுதல். “தெற்றுகாலினரோடினர்’’ (உபதேசகா. சிவவிரத. 139). 4. தடைப்படுதல். “இல்வாழ்க்கை யென்னுமியல்புடை வான்சகடம் செல்லாது தெற்றிற்று நின்று’’ (அறநெறி. 158). 5. பிழைசெய்தல். “தெற்றினார் புரங்கள் செற்றார்’’ (பெரியபு. திருநீலகண்ட. 3). 6. மாற்றுதல். “இது சந்திரன் தொழிலைத் தெற்றினமையால் தெற்றுருவகம்’’ (வீரசோ. அலங். 18, உரை). 7. இகலுதல். “மருட்டி யெங்குந் தெற்றிய விவனை’’ (திருவாலவா. 30:23). 8. கொன்னுதல். 9. முட்டி தட்டுதல். 10. பின்னுதல். தெற்றல் = மறுபாடுடையவன். “தெற்றலாகிய தென்னி லங்கைக் கிறைவன்’’ (தேவா. 680: 8). தெற்றுக்கால் - முட்டிதட்டுங் கால். தெற்றிக்காளை = பின்கால் முட்டிதட்டுங் காளை. “தெற்றிக்காளை கழுத்தால் நெரிக்க’’ (பறாளை. பள்ளு.). தெற்றுப்பல்= தென்னிக்கொண்டு அல்லது ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கும் பல். தெற்றுமாற்று = ஏமாற்று. தெற்றுவாய் = கொன்னைவாய். தென் = தென்னைமரம் இயற்கையாக வளர்ந்த தென்றிசை. குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையையும், தென்கண்டத்திலும் அதனையடுத்த தீவுகளிலும் இன்றும் தென்னை செழித்து வளர்தலையும் நோக்குக. தென் - தெற்கு = தென்றிசை. தென்மொழி = குமரிக்கண்டத்தின் தெற்கில் தோன்றிய தமிழ்மொழி. தென்புலம் = தமிழகத்தின் தெற்கிலிருந்த பாண்டிநாடு. தென்னவன் = தென்புலத்தை யாண்ட பாண்டியன். |