பக்கம் எண் :

151

திறந்தவெளி = கட்டடம் மரம் குன்று முதலியன இல்லாத வெட்டவெளி.

திற - திறப்பு = 1. பிளப்பு. “மண்டிறப் பெய்த வீழ்ந்தான்’’ (கம்பரா. கும்பக. 195). 2. திறவுகோல் (யாழ்ப்.). 3. வெளியிடம்.

க. தெறப்பு, தெ. தெரப்பி.

துன் = துளை. துன்னுதல் = துளைபோன்ற வாய்க்குட் செலுத்துதல், உண்ணுதல். ஒ.நோ : உள் - உண்.

இவ் வினை (துன்) இன்று வழக்கற்றது. துன் - துற்று. துற்றுதல் = 1. உண்ணுதல். “கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி’’ (அகம். 36). 2. கவ்வுதல். “இகலன்வாய்த் துற்றிய தோற்றம்’’ (களவழி. 28). . துத்து.

துற்று = உணவு. “பற்றின்று துற்றின்று’’ (பு. வெ. 10 : 4). 2. கவளம். “முற்றுற்றுந் துற்றினை’’ (நாலடி, 190).

துற்றர் = உண்பவர். “விரைந்தால முண்ணுந் துற்றரை’’ (தேவா. 204: 9).

துற்றவை - நுகர் பொருள். “துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை’’ (திருவாச. 3: 137).

துற்றி = உணவு, உண்பவை (திவா.).

துன் - தின். தின்னுதல் = 1. உண்ணுதல். “இரும்பே ரொக்க லொடுதின்மெனத் தருதலின்’’ (புறம். 150). 2. சிற்றுண்டி யருந்துதல். 3. மெல்லுதல். 4. மிகுதியாய் உண்ணுதல். 5. அரித்தல். ஏட்டுச் சுவடியைக் கறையான் தின்றுவிட்டது. (உ. வ.). 6. வருத்துதல். “பிணிதன்னைத் தின்னுங்கால்’’ (திரிகடு. 88).

“கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று. ’’      (குறள். 1244)

7. சொறிவெடுத்தல். “தின்றவிடஞ் சொறிந்தாற் போல’’ (திவ். திருவாய். 4 8 9). 8. பிறர் பொருளை நுகர்தல். என் சொத்தை யெல்லாந் தின்றுவிட்டான். (உ. வ.). 9. அராவுதல். “அரந்தின்ற கூர்வேல்’’ (கம்பரா. சம்புமா. 6). 10. வெட்டுதல். “கோணந் தின்ற வடுவாழ் முகத்த’’ (மதுரைக். 592). 11. அழித்தல். “அறிவழுங்கத் தின்னும் பசிநோயும்’’ (திரிகடு. 95). 12. பெறுதல். “கானகம்போய்க்குமை தின்பர்கள்’’ (திவ். திருவாய். 4 1 2). நன்றாய் அடி தின்றான் என்பதுஉலக வழக்கு.

. தின்னுக, க. தின், தினு, தின்னு; தெ. தினு, கோத். தின், துட. தின்.