பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

16. பெருமை

பரு - பெரு. பருப்பொருட் கருத்தான பெருமைக் கனத்தினின்று, நுண்பொருட் கருத்தான பெருமை கனம் தோன்றும். குரு - குருக்கள், குருசில் - குரிசில், குரவன், குருமகன். கனம் பொருந்திய, கனவான் முதலிய சொற்களையும் வழக்குகளையும் நோக்குக. கலந்தை = பெருமை.


சிறுகிளைக் கருத்துகள்

பொருத்தற் கருத்தினின்று கட்டுதல், அமைத்தல், புனைதல், செலுத்துதல், அணிதல், மணத்தல் முதலிய பல கருத்துகள் தோன்றும். அவை யாவும் முற்கூறப்பட்டன. திரட்சிக் கருத்தினின்று திண்மை, உறுதி, திறமை ஆகிய கருத்துகள் தோன்றும்.

திண்மை குழம்பு = திண்ணிய சாறு. குட்டி - கட்டி. கூளியர் = படைமறவர்.

உறுதி கட்டு = உறுதி. கட்டி - கெட்டி. [கட்டனை= திமிசு]

திறமை கெட்டி - கெட்டிக்காரன். கட்டாணி = திறவோன்.

தெ. கட்டாணி.

குறிப்பு : கும் - கும்மல் - குமியல் - குவியல், கும் - கும்பு - கும்பல், கும்பு - குப்பு - குப்பல், குப்பை, கும்பு - கும்பை முதலிய சொற்கள் குவிதற் கருத்தோடு கூடற் கருத்தையுங் கொண்டன வேனும், அவை உன் என்னும் உயிர்முதல் வேர்ச்சொல்லினின்று திரிந்தனவாதலின், இங்குக் கூறப்பட்டில. உயிர்மெய்ம்முதல் வேர்ச்சொற்கள் முடிந்த பின், ‘பின்’ முதலிய சில உயிர்முதல் வேர்ச்சொற்கள் விளக்கப் பெறும்.