குல்1 (தோன்றற் கருத்துவேர்) தோன்றற் கருத்தினின்று இளமை, மென்மை, சிறுமை, குறுமை முதலிய கருத்துகள் கிளைக்கும். குல் - குன் - குன்னி = சிறுபிள்ளை, சிற்றுயிரி, சிறு பொருள். ‘நன்னியுங் குன்னியும்’ என்பது பாண்டிநாட்டு உலக வழக்கு. குல் - குள் - குளகு = 1. இளந்தழை. “வாரணமுன் குளகருந்தி’’ (கலித். 42). 2. விலங்குணா. “மறிகுள் குண்டன்ன மன்னா மகிழ்ச்சி’’ (நாலடி. 17). “இலைநுகர் விலங்கு ணாவே குளகென வியம்ப லாகும்’’ (சூடா. 6 32). 3. தழையுடை. “குளகரைச் சுற்றிய குறம டந்தையர்’’ (காசிகண். 44 16). 4. இலைக்கறி. (W). குளகு - குளகன் = இளைஞன். “குளகன் வந்துழி’’ (கந்தபு. குமார. 1). குள - குழ = இளமையான. “மழவுங் குழவும் இளமைப் பொருள’’ (தொல். உரி. 14). குழ - வ. குட (guda). குட என்னும் வடசொல்லினின்று குழ என்னுந் தென்சொல் திரிந்துள்ளதாகச் சென்னைப் ப. க. க. த. அகரமுதலி தலைகீழாகக் காட்டியுள்ளது. குழ - குழவு = இளமை. குழவு - குழவி = 1. இளஞ்சேய், கைக்குழந்தை. “ஈன்ற குழவி முகங்கண்டிரங்கி’’ (மணிமே. 11 114). 2. யானை, ஆவு, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம்முதலிய விலங்கின் இளமைப் பெயர். (தொல். மரபு, 19 - 23). 3. ஓரறிவுயிரின் இளமைப்பெயர். “வீழில் தாழைக் குழவி’’ (தொல். மரபு, 24, உரை). 4. ஒரு குறுமைப்பொருள் முன்னொட்டு. “குழவித் திங்கள்’’ (தொல். மரபு. 24, உரை). ஒ.நோ : E. cule, F. cule, L. culus, cula, culum - dim. suf. E. cule - cle, cel etc. |