கிளைக் கருத்துகள் 1. கன்னலமுது கன்னல் = கரும்பு (திவா.), சருக்கரை (திவா.), கற்கண்டு (திவா.), மணற்பாகு (பிங்.), கன்னலமுது (பாயசம்). மூவகைக் கரும்புள் கரிய செங்கரும்பே இனிமைமிக்கும் பெருவழக்காகவும இருத்தல் காண்க. 2. வயிரம் (வைரம்) அல்லது முதிர்ச்சி ஒருசார் மரவயிரம் கருநிறத்தது. “வெள்ளை சூவை (வெளிறு), கறுப்பு வயிரம்’’ என்பது ஒரு மரபுச் சொலவு. கரி = மரவைரம். கருங்கரி = முதிர்ந்தஇறைச்சி. கருங்காய் = முற்றிய காய்.
காழ்த்தல் = 1. வயிர்த்தல், முற்றுதல். “காழ்ந்தமரம் (திரிகடு. 75). 2. மனவைரங் கொள்ளுதல். “காழ்த்த பகைவர் வணக்கமும்’’ (திரிகடு. 24). காழ் = 1. மரவைரம் (திவா.). 2. மனவுறுதி. “காழிலா மம்மர்கொள் மாந்தர்’’ (நாலடி. 14). காழ்ப்பு = 1. வைரம் (பிங்.). 2. மனவைரம். “காழ்ப்பு மருட்கை மதத்தோடு’’ (சேதுபு. மங்கல. 15, காய்த்தல் = 1. முற்றுதல், முதிரவிளைதல். “காய்நெல்லறுத்து’’ (புறம். 184). 2. தழும்புண்டாதல். காய்ப்பு = 1. தோலின் தடிப்பு. 2. தழும்பு. கறுப்பு= தழும்பு. கறுத்தல் = முற்றுதல். “கௌவை கறுப்ப’’ (மதுரைக். 271.) கறுவு = வயிர்த்தசினம். “கறுவொடும் பிரக லாதன் கதழ்சினம்’’ (கூர்மபு. அந்தகா. 86). கறு = மனவைரம். “அரக்கன்............ கறுவுடையான்’’ (கம்பரா. கும்பக. 357). கறம் = வயிர்த்த பகை. 3. நஞ்சு பாம்பின் நஞ்சுகலந்த அரத்தம் கருநிற மடைந்துவிடுவதாலும், சில நச்சுப் பொருள்கள் கருநிறமாயிருப்பதாலும், கருமைக் கருத்தில் நச்சுக் கருத்துத்தோன்றிற்று. களம் = நஞ்சு (பிங்.). களம் - கரம் = நஞ்சு. “கரம்போலக்கள்ளநோய்’’ (சிறுபஞ். 62). கரம் - Skt. gara. களங்கம் = ஒருவகை இயற்கை நஞ்சு. கறை = நஞ்சு. “கறையுறு பகுவா யுரகம்’’ (ஞானா. பாயி. 7 5). காரி = நஞ்சு. “காரியுண்டிக் கடவுள தியற்கையும்’’ (மலைபடு. 83). காளம் = நஞ்சு (திவா.). கரி = நஞ்சு (மூ. அ.). |