பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

செய்யுள் இசைப்பாவிற்கு இனமானதே. பாட்டு, பாணி, தேவபாணி, பெருந்தேவபாணி என்னுஞ் சொற்கள், செய்யுட்கும் இசைப்பாவிற்கும் பொதுவாக வழங்குதல் காண்க.

பண் = 1. இசைவகை. “பண்ணென்னாம் பாடற் கியை பின்றேல்” (குறள். 573). 2. எழுமுரல் (சுர). இசைவகை. “பண்ணுந் திறனும்” (பெருங். வத்தவ. 3 56). “நிறைந்த நரம்பு நிகழும் பண்ணெனல்” (பிங். 6 324). 3. இசைப்பாட்டு (பிங்.). 4. நரப்புக் கருவிகளான யாழ்வகைகள். “பண்கெழு மெல்விரலால்” (சீவக. 220).

பண் - பாண் = பாட்டு. “பூணினான்றன் பாண்வலைச் சென்று பட்டாள்” (சீவக. 2040).

பாண் - பாணன் = இசையும் இசைத்தமிழும் வளர்த்த பண்டைத் தமிழ வகுப்பான். “கூத்தரும் பாணரும்” (தொல். புறத். 36).

பாணன் - பாணான் = ஆரியச் சூழ்ச்சியால் இசைத் தொழிலிழந்து தையல் வேலை செய்யும் தமிழ வகுப்பான்.

பாணன் - பாண் = பாணர் குலம்.

பாண் - பாணு = பாட்டு. “பாணுவண் டரற்றுங் கோலச் சிகழிகை” (சீவக. 2447).

பாணன் - பாணி = பாணன் மனைவி, பாணர்குலப் பெண்.

“என்கொணர்ந்தாய் பாணாநீ யென்றாள் பாணி”    (தனிப்பாடல்)

பாண் - பாடு. பாடுதல் = 1. பண்ணிசைத்தல். “மறம்பாடிய பாடினி யும்மே” (புறம். 11). 2. வண்டு இமிழ்தல். “வண்டு பல விசைபாட” (திவ். பெரியதி. 3 9 3. செய்யுள் செய்தல். “பாடினார் பல்புகழைப் பல்புலவர்” (பு. வெ. 8 1). 4. செய்யுளாற் புகழ்தல். “பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்” (புறம். 32). 5. சண்டையில் வைதல். அவளை நன்றாய்ப் பாடிவிட்டாள். (உ.வ.). “ஆடினாள் பாடினாள்” (தனிப்பாடல்).

பாடு - பாட்டு = 1. பாடுகை. 2. இசைப்பாடல். 3. இன்னிசை. “கூத்தும் பாட்டும்” (மணிமே. 2 19). 4. செய்யுள் “பாட்டுரை நூலே” (தொல். செய். 78). 5. வசைமொழி. என்னிடம் பாட்டுக் கேட்க வேண்டுமா? (உ.வ.).

பாடு - பாடகன் = பாடுவோன். “பாடகர் பாணர் புகழக் கண்டு” (திருவாலவா. 55:3).