பாடகன் - பாடகி = பாடுபவள் (நாம. 183). பாடகன் - பாடினி = பாணர்குல மகள். “மறம்பாடிய பாடினி யும்மே” (புறம். 11). பாடு - பாடி = 1. பாடுபவன். எ-டு: வலவன்பாடி. பாடுபவள். எ-டு: கூழுக்குப் பாடி. பாடுவது. எ-டு: வானம்பாடி. 2. பாடி யிரப்பெடுப்பவன் - வள். பாடி பரதேசி (W.). பாண் - பாணி = 1. இசைப்பாட்டு (திவா.). “புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி” (சிலப். 8 44). 2. இன்னிசை (சங்கீதம்). “பாணியாழ” (சீவக. 1500). 3. இசையொலி. “கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்” (சிலப். 13 148). 4. இசையுறுப் பாகிய தாளம். “தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக” (கலித். 102). Poem என்னும் கிரேக்க ஆங்கிலச் சொல்லும், பண் செய்யுள் என்னும் இரு சொற்களை வேர்ச்சொற் பொருளில் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. Gk. poema = poiema f. poieo, to make. பொள் - பொய். பொய்தல் = (செ.கு.வி.) 1. துளைக்கப்படுதல். “பொய்தக டொன்று பொருந்தி” (கம்பரா. பஞ்ச. 49). 2. பிடுங்கப் படுதல். “பொய்த குத்தின....புண்” (கம்பரா. கிங்கர. 50). (செ.குன்றாவி.) வீழ்த்துதல். “அவை பார்சோரப் பொய்தான்” (கம்பரா. அட்ச. 33). வீழ்த்துதலாவது பள்ளமான அல்லது கீழ்மட்டமான இடத்தை அடையச் செய்தல். பொய் - பொய்கை = 1. ஏரி அல்லது குளம். “பொய்கை வாயிற் புனல்பொரு புதவின்” (பதிற். 27). 2. இயற்கையான ஏரி. “வாவியும் பொய்கையுங் கண்டீர்” (சீவக. 337). பொய் = 1. உட்டுளை. “பொய்பொரு முடங்குகை” (சிலப். 15 20). 2. மரப்பொந்து (பிங்.). 3. உள்ளீடில்லாதது. 4. உண்மை யல்லாதது. “பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ” (குறள். 938). 5. போலியானது (W.). 6. நிலையாமை. “புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கையை” (திருநூற். 3). 7. மாயை (W.). ம. பொய். பொய்த்தல் = (செ. குன்றாவி.) 1. உண்மையல்லாததைச் சொல்லுதல். “தன்னெஞ் சறிவது பொய்யற்க” (குறள். 293). 2. ஏமாற்றுதல், வஞ்சித்தல். “நின்றோடிப் பொய்த்தல்” (நாலடி. 111). |