பகல் - பால். 1. பிரித்துக் கொடுக்கை. “பாலுங் கொளாலும் வல்லோய்.” (பதிற். 16 19). 2. பகுதி “அறையென வரூஉம் பால்வரை கிளவிக்கு” (தொல். தொகை. 23). 3. பாதி. “பானா ளிரவில்” (கலித். 90). 4. பக்கம். “ஒருபாற் கோடாமை” (குறள். 118). 5. தொழில் வகுப்பு. “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்” (புறம். 183). 6. இடையர் குறும்பர் குல உட்பிரிவு (E.T.V. 450). 7. திசை (பிங்.). 8. இடம் (யாழ். அக.). 9. குணம் (பிங்.). 10. இயல்பு (பிங்.). 11. உயிர்கட்கு அவற்றின் வினைக்கேற்ற இன்ப துன்பம் வகுக்கும் ஊழ். 12. ஆண், பெண், பலர், ஒன்று, பல என்னும் இலக்கண ஐம்பாற் பிரிவு. “இருதிணை மருங்கின் ஐம்பால்” (தொல். கிளவி. 10). க. பால், தெ. பாலு. பால் - பான்மை = 1. பகுதி. “தேவர் பான்மை யிற்றென்று” (சீவக. 553). 2. குணம். “சொல்லிய பான்மை யாகி” (தாயு. பொருள்வ. 12). 3. தகுதி. “நற்றவம்......பயின்ற பான்மையான்” (கம்பரா. தாடகை. 23). 4. முறைமை. “பான்மையிற் பிணித்து” (மணிமே. 18 110). 5. சிறப்பு. “பரசிரா மேச்சரத்தின் பான்மை சொல்வாம்” (காஞ்சிப்பு. பரசிரா. 1). 6. நல்வினைப் பயன். “புருவத்தாட்கு வந்தடை பான்மை” (சீவக. 539). பகு - பகிர். பகிர்தல் = (செ. குன்றாவி.) 1. பிளத்தல். 2. பங்கிடுதல். “பொற்பு மிக்க மாயன் பகிரு மமிர்தந்தனை” (கந்தபு. மகாசாத். 20). (செ.கு.வி.) பிரிதல் “பரதனு மிளவலு மொருநொடி பகிராது” (கம்பரா. திருவவ. 131). பகிர் = 1. பங்கு “கௌசலை கரத்தி னோர்பகிர் தாமுற வளித்த னன்” (கம்பரா. திருவவ. 89). 2. துண்டம். “திங்களின் பகிர்புரை..... எயிறு” (திருவிளை. நாகமெய்த. 15). 3. வெடியுப்பு (யாழ். அக.). பகிர் - வகிர் = 1. பிளவு. 2. கீறு (W.). 3. பிளந்த துண்டு. “மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்” (திருவாச. 9 2). 4. உச்சியெடுப்பு. “வார்ந்த நெடுங்கூந்தல் வகிரினாள்” (வெங்கையு. 304). 5. தோல்வார் (யாழ். அக.). 6. வார்க்கச்சு (W.). 7. நரம்பு (யாழ். அக.). 8. வழி (பிங்.). வகிர்தல் = 1. வகிரெடுத்தல். 2. கீறுதல். “பகிர்ந்தான் சில வகிர்ந்தான்” (கம்பரா. அதிகாய. 160). 3. கோதுதல் (சது.). 4. பிளத்தல் (சது.). 5. துண்டாக அறுத்தல் (சது.). 6. பங்கு செய்தல் (சது.). வகிர் - வகிடு = உச்சியெடுப்பு. பகு - பகை. பகைத்தல் = 1. வெறுத்தல். 2. அழிக்கக் கருதுதல். |