நுனிப்பு = கூர்ந்தறிகை. “நூனெறி வழாஅ நுனிப்பொழுக் குண்மையின்” (பெருங்.வத்தவ. 7,34) நுண்-நுண்பு-நுட்பு-நுட்பம். “பாலியேங் கண்காண் பரிய நுண்புடையீர்” (திவ். இயற். பெரிய திரு. 8) நுண் - நுண்ணிமை = நுண்மை. நுணங்குதல் = நுட்பமாதல். நுணங்கு-நுணக்கம் = கூர்மை. நுணங்கு = நுண்மை. நுணாவுதல் = விரல் நுனியால் அல்லது நாநுனியால் தடவி யறிதல். நுணாசுதல் = நுணாவுதல். நுணித்தல் = கூர்மையாக்குதல், நுணுகி ஆராய்தல். நுணுகுதல் = கூர்மையாதல், நுட்பமாதல். நுணுகு-நுணுக்கு-நுணுக்கம். நுணுக்குதல் = கூர்மையாக்குதல், மதியைக் கூர்மையாக்குதல், நுண்மையாக்குதல், பொடிசெய்தல், சிறிதா யெழுதுதல், நுண்ணிதாக வேலை செய்தல். நுணுக்கு - நுண்மை, நுட்பமானது. நுணுக்கம் = கூர்மை, கூரறிவு, நுண்மை, நுட்பம், வேலைத்திறம். நுணுங்குதல் = நுணுகுதல், பொடியாதல். நுணுங்கு - நணுங்கு. நணுங்குதல் = சிறுத்தல், வளராமை. நுணைத்தல் = நுணாசுதல். நுள்-நுறு=நுறுங்கு-நொறுங்கு = நுண்மை. நுள்-நுசு-நொசு-நொசி. நொசிதல் = நுண்மையாதல். நொசி = நுண்மை. நொசி-நொசிவு = நுண்மை. “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை” (தொல். உரி. 76) நுள்-(நொள்)-நொய்-நொய்வு-நொய்ம்மை. நொய்ய = நுட்பமான. நுள் = (நு) - நுவ் - நுவல். நுவலுதல் = நுட்பமாகச் சொல்லுதல், நூலுரைத்தல். |