உல் - (இல்) - இலகு - இலங்கு - இலக்கு - இலக்கம் = விளக்கம். (இல்) - எல் = ஒளி. “எல்லே யிலக்கம்” (தொல். இடை. 21) உள் - ஒள் - ஒளி - ஒளிர் - ஒளிறு. உள் - உடு. உவி - அவி - அவிர். அவிர்தல் = விளங்குதல். குல் - (குல) - குலவு - குலாவு. குலவுதல் = விளங்குதல். குல் - குரு = ஒளி, நிறம். குள் - (கள்) - களை = அழகு. கள் - (கடு) - கடி = விளக்கம். “அருங்கடிப் பெருங்காலை” (புறம். 166) குள் - கெழு = ஒளி, நிறம். கெழு - கேழ் = ஒளி, நிறம். கேழ் - கேழல் = நிறம். “குறுவுங் கெழுவு நிறனா கும்மே” (தொல். உரி. 5) கள் - காள் - காய் - காய்தல் = விளங்குதல். நிலாக் காய்கிறது என்னும் வழக்கை நோக்குக. சுல் - (சொல்) - சொலி. சொலித்தல் = விளங்குதல். சொல் - சொன்றி, சோறு. சொல் = பொன்போற் பொலியும் கூலமாகிய நெல். சுள் - சுடு - சுடர். சுடர்தல் = ஒளிவிடுதல். துல் - துலகு - துலங்கு - துலக்கு - துலக்கம் = விளக்கம். துள் - துளகு - துளங்கு - துளக்கு - துளக்கம் = விளக்கம். துளங் கொளி = கேட்டை. துளங்கு - தளங்கு - தயங்கு - தயக்கம் = விளக்கம். (துகு) - தகு. தகதக என்று சொலிக்கிறது என்பது வழக்கு. தகு - தங்கு - தங்கம். தகு - தகை = அழகு, விளக்கம். (துகு) - (திகு) - திகழ். திகழ் - திங்கள். (நுல்) - நில் - நில - நிலா - நிலவு. நில் - நெல் = பொன்போல் விளங்கும் கூலம். “சடைச்செந்நெல் பொன்விளைக்கும்” (நள. 68) பொன்விளைந்த களத்தூர் முதலிய தொடர்களை நோக்குக. |