பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சில அஃறிணை யொலிக்குறிப்புகளும் சொற்களும் கடுமை அல்லது இழிவுபற்றி மக்கள் செயலையுங் குறிக்க வரும்.

எ-டு: சள்ளெனல் = நாய்போற் சினத்தல், சீறுதல் = அராப்போற் சினத்தல்.

(3) விரவுத்திணை யொலிகள்

ஒலிக்குறிப்புசொல்
அ(ள்)அழு
இர்இரை
இயம், இயம்பு, இயங்கு3, இயை-இசை
ஏங்கு (ஏங்குதல் = ஒலித்தல்)
ஓசை - ஓதை
கர்கரை
கூ கூ, கூவு, கூப்பு - கூப்பிடு - கூப்பீடு - கூப்பாடு; கூச்சல், கூகை
பட்டுபடு (படுதல் = ஒலித்தல்)

பேரோசையைக் குறிக்கும்போது, ஓகாரமும் ஓகார உயிர்மெய்யு மாகிய இடைச்சொல்லாற் குறிப்பது வழக்கம்.

எ-டு: ஓவென்று இரைகிறது, கோவென்று அலறினான், சோ வென்று மழை பெய்கிறது.

அழை, விளி முதலிய பல ஒலிவினைச் சொற்கள் ஒலிக்குறிப் படியினவாகத் தோன்றாவிடினும், உண்மையில் ஒலிக்குறிப்படியினவே எண்ணிறந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் வழக்கற்று மறைந்தன.

(4) ஒலிக்குறிப்புகளைப்பற்றிக் கவனிக்க வேண்டியவை

(1) ஒலிக்குறிப்புகள் இத்துணைய வென்றும் இத்தகைய வென்றும் அறியப்படாவாறு எண்ணிறந்தன; பல்திறத்தன.

(2) ஒலிக்குறிப் பெல்லாம் இடைச்சொல்லாம். சொல்லென்று விதந்து சுட்டப்பெறுவன பெயரும் வினையுமாகிய இரண்டே. சொற்றன்மை நிரம்பிய வொலி சொல்லும், நிரம்பாவொலி ஒலிக் குறிப்பும் ஆகும். மண்ணும் மரமும் போலக் கருவிநிலைப்பட்டவை ஒலிக்குறிப்புகள்; குடமும் பெட்டியும் போலச் செய்பொருள் நிலைப்பட்டவை சொற்கள்.

3. இயங்கு - இயக்கு. இயக்குதல் - ஒலிப்பித்தல், “கொடுமணி யியக்கி” (திருமுருகாற்றுப் படை, 246)