(4) உயர்ச்சி உடம்பால் உயர்தலும் நிலைமையால் உயர்தலும் இடத்தால் உயர்தலும் என உயர்தல் மூவகை. ஊ - உ - மேல், உயர்ந்த. எ-டு: உத்துங்கள். உத்தரி, உத்தரியம், உத்தூளனம் முதலிய பல வடசொற்களில் முன்னொட்டாயிருந்து, உயர்ச்சி அல்லது மேலுறவுக் கருத்தை உணர்த்துவது உகரமே. உல்லி - மதில். உள் = மேன்மை. உகத்தல் = உயர்தல். “உகப்பே உயர்வு” (தொல். உரி. 8) உகைத்தல் = உயரவெழும்புதல். உச்சம் - உயர்ச்சி. உச்சி = உச்சமான இடம். உத்தரம் = உயர்வு, உயரவிருக்கும் விட்டம், உயர்ந்த வடதிசை. குமரிமலை மூழ்கிப் பனிமலை எழுந்தபின், வடதிசை உயர்ந்தது; தென்றிசைதாழ்ந்தது. இதனால், அவை முறையே உத்தரம் தக்கணம் எனப்பட்டன. உத்தரம் (உ+தரம்)= உயர்வு. தக்கணம் (தக்கு + அணம்) = தாழ்வு. உப்புதல் = எழுதல், பருத்தல், வீங்குதல். உப்புசம் = வயிற்றுப் பொருமல். உம்பர் = மேல், மேலிடம், ஆகாயம், தேவருலகம், தேவர். உம்பரான் = உயர்நிலையி லிருப்பவன். உம்பரம் = மேலிடம், ஆகாயம், தேவருலகம். உம்பல் = உயரமான விலங்காகிய யானை. உயர் - உயரம், உயர்வு, உயர்ச்சி, உயர்த்தி. உவணம் = உயரப் பறக்கும் பருந்து. உவணம் - உவணன். “உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?” என்பது பழமொழி. |