உன்னுதல் = பொருந்துதல், கருதுதல், தியானித்தல் உன் - உன்னம் = தியானம். உன்னித்தல் = பொருத்தமாக ஊகித்தல். உறுதல் = பொருந்துதல், கருதுதல். ஓர்தல் = பொருந்துதல், கருதுதல்; கருதியறிதல். குள் - கள் - (கரு) - கருது - கருத்து. கள்ளுதல் = கூடுதல், பொருந்துதல். கள் - கண். கண்ணுதல் = பொருந்துதல், கருதுதல், மதித்தல். கண் = கண்ணியம் = மதிப்பு. (சுள்) - செள் - செ. செத்தல் = பொருந்துதல், ஒத்தல், கருதுதல். செத்தல் = கருதுதல். “அரவுநீ ருணல்செத்து” (கலித். 45) “வெப்புடை யாடூஉச் செத்தனென்” (பதிற். 86) செத்தல் = ஒத்தல். “வெள்ளாங் குருகின் பிள்ளை செத்து” (ஐங். 151) செ - செத்து - சித்து. ஒ.நோ: ஒத்து. செந்துரம் - சிந்துரம். சித்து = கருத்து, அறிவு, கருதியதை அடையும் திறம். சித்து - சித்தன். முன்னுதல் = பொருந்துதல், கருதுதல். முன் - முன்னம் = கருத்து, குறிப்பு. முன் - மன். மன்னுதல் = பொருந்துதல். கருதுதல். மன் - மனம் = கருதும் அகக்கரணம். மன்னுந்திறம் மந்திரம். திரம் = திறம். றகரத்திற்கு முந்தியது ரகரம். மன் + திரம் = மந்திரம் = கருத்து வலிமை, எண்ணத்தின் திண்ணம். உள்ளத்தை அல்லது ஆசையை அடக்கிய முனிவன், தன் கருத்து வலிமையால் தான் கருதியதை நிறைவேற்று மொழியும், தான் கண்டுபிடித்த தப்பாத உண்மைகளைச் சொல்லுமொழியும், மந்திர மாகும். “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப ” (தொல். செய். 178) |