பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

அள் - (அய்) - ஐ = பெருமை, பெரியோன், தலைவன், தந்தை, அரசன், ஆசிரியன், கணவன்.

ஐ - ஐயன் (ஐ+அன்) = பெரியோன், மூத்தோன், உயர்ந்தோன், தலைவன், தந்தை, அரசன், ஆசிரியன், முனிவன், (அந்தணன்). பார்ப்பான் (கோயிற்காரியம் பார்ப்பவன்), தேவன், சாத்தன்.

ஐயன் - ஐயை (பெண்பால்) = பெரியோள், தலைவி, ஆசிரியை, ஆசிரியன் மனைவி, துறவினி (தவப்பெண்), காளி (துர்க்கை), மலைமகள் (பார்வதி).

ஐ அல்லது ஐயன் என்னும் பெயர், முதலாவது மூப்பு காப்பு அறிவு தவம் முதலியனபற்றி, பெரியோன் அல்லது தலைவன் என்ற பொருளையே குறித்தது. இன்றும் பெரியோரையெல்லாம் ஐயா என்றே அழைத்தல் காண்க.

“என்னைமுன் நில்லன்மின்"                                         (குறள். 771)

என்ற குறளில் 'ஐ' தலைவனைக் குறித்தது.

ஐங்குரவர் என்னும் ஐவகைப்பட்ட பெரியோருள், முதல்வன் தந்தை. பிறப்பை அடிப்படையாகக்கொண்ட ஆரியக்குல முறைப்படி, தமிழருள் ஏற்றிழுவுபெற்ற ஒருசார் மேலோரும் ஒருசார் கீழோரும், தந்தையை முறையே ஐயா என்றும் ஐயன் என்றும், தொன்றுதொட்டு (ஆரியர் தென்னாடு வருகைக்கு முன்பிருந்தும், தமிழ் குமரிநாட்டில் தோன்றியதிலிருந்தும்), அழைத்துவருகின்றனர். ஐயா என்பது ஐயன் என்பதன் விளிவடிவம். அன்னீற்றுப் பெயர் உலக வழக்கில் உயர்வு குறியாமைபற்றி, ஐயா என்னும் விளிவடிவமே ஐயன் என்னும் எழுவாய் வடிவத்திற்குப் பதிலாகவும் வழங்கி வருகின்றது.

தந்தையை நிகர்த்தவள் தாய். ஐயை என்னும் பெண்பாற்பெயர், பொதுவாகப் பெரியோளைக் குறிக்கும்போது திரியாதும், தாயைக் குறிக்கம்போது ஆய் என்று திரிந்தும், வரும். ஆய் - ஆய்ச்சி (இரட்டைப் பெண்பால்). ஆயன் என்னும் ஆண்பாற்பெயர் இடையனையே குறித்தலையும், ஆய்ச்சி என்னும் பெண்பாற் பெயர் இடைச்சியைக் குறித்தலோடு தாய் பாட்டி என்னும் பொருள்களில் வழங்குதலையும் நோக்குக.

அன்னையுந் தந்தையும் முன்னறி தெய்வமாதலாலும், திருமண மாகும்வரை மக்கள் பெற்றோரோடேயே உறைதலாலும், ஏதேனுமொரு