இன

12

ஆராய்ச்சி உரை

    இன்னும் பலவற்றைச் சொல்லலாம். ஆயினும் ஒருவாறு மிகுதியாக வழங்குபவற்றை எண்ணி மேலே கூறியபடி‘ (1) தொழில் செய்வார் பாடல், (2) இன்பப்பாடல் (3) உணர்ச்சிப் பாடல், (4) குழந்தைப் பாடல், (5) விளையாட்டுப் பாடல் (6) கருத்துப் பாடல், (7) கதைப்பாடல், என்று ஏழு பகுப்பாகப் பிரித்துக்கொள்ளலாம்.

வரிப் பாடல்கள்

    சிலப்பதிகாரத்தில் வரிப் பாடல்கள் என்று சில பாடல்கள் வருகின்றன. அவை இளங்கோவடிகளால் இயற்றப் பெற்றவை. இயல்பாக இந்நாட்டில் வழங்கிய, பல வரிப் பாடல்களை அடியொற்றி அவர் அமைத்துக்கொண்டவை அவை என்றே சொல்ல வேண்டும். கானல்வரி, ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி, சாயல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு என்ற பாடல்கள் அதில் வருகின்றன. இவை பண்ணத்தியாகிய நாடோடிப் பாடல்களை நினைத்துப் பாடியவையே ஆகும். சில எடுத்துக் காட்டுக்களைக் கொண்டு இதை உணரலாம்.

    அம்மானைவரி என்ற பாட்டு இளங்கோவடிகள் பாடி அமைத்தது. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் திரு அம்மானை என்றே ஒரு பகுதியிருக்கிறது. மூவர் அம்மானை என்று ஒரு தனி நூல் உண்டு. கலம்பகம் என்ற பிரபந்தத்தில் அம்மானை என்பது ஓர் உறுப்பு. இவை யாவும் புலவர் பாடியவை; ஆயினும் மகளிர் பாடுவனவாக அமைந்தவை. தமிழ்நாட்டுப் பெண்கள் அம்மானைக் காய்களை வைத்துக்கொண்டு ஆடும்போது பல பாடல்களைப் பாடுவார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு அந்த மெட்டில் அமைத்தவையே இப்பாடல்கள். அப்படியே மற்ற வரிப்பாடல்களுக்கும் நாடோடி இலக்கிய உலகத்தில் மூலம் இருப்பதை உணரலாம்.

    நாடோடிப் பாடல்களின் உருவத்தை இலக்கியம் படைத்த புலவர்களும் எடுத்தாண்டார்கள் என்பதற்கு இப்போது கிடைப்பவற்றுக்குள் பழைய எடுத்துக்காட்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாடியுள்ள வரிப்பாடல்கள்.