New Page 1
“நறுமலைச் சிலம்பில்
நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக்
குறிஞ்சி பாடி
... ... ...
... ... குறமகள்
முருகியம் நிறுத்து”1
தினைக் கொல்லையில் குற
மகளிர் கிளிகளைக் கடிவதற்காக ஒருவகைப் பாட்டைப் பாடுவர். அதைப் பிற்காலத்தில் ஆலோலம்
என்பர்.
“புள்ளார் இயத்த விலங்குமலைச்
சிலம்பின்
வள்ளுயிர்த் தெள்விளி
இடைஇடைப் பயிற்றிக்
கிள்ளை ஓப்பியும்”2
“கிளிகடி மகளிர் விளிபடு
பூசல்”3
குற மக்கள் புலியொடு
பொருகின்றனர். அப்போது அவர்களுக்குக் காயம் உண்டாகிறது. அதனால் உண்டாகும் வேதனை தணிவதற்காக
அவர் மனைவியராகிய குறமகளிர் பாடுகின்றனர்.
"கொடுவரி பாய்ந்தெனக்
கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்
காப்பென
அறல்வாழ் கூந்தற்
கொடிச்சியர் பாடல்.”4
குறமகளிர் தினையைக்
குத்தும்போது பாடுகிறார்கள். அந்தப் பாட்டுக்கு வள்ளைப் பாட்டு என்று பெயர்.
“தினைகுறு மகளிர் இசைபடு
வள்ளை”5
“பாவடி உரல பகுவாய்
வள்ளை”6
“ கொல்யானைக் கோட்டால்
வெதிர்நெற் குருவாம்நாம்
வள்ளை அகவுவம்வா, இகுளைநாம்
வள்ளை அகவுவம் வா.”7
குறவர்கள் தம் பெண்டிரொடு
குரவைக் கூத்தாடும்போது பாடுவர்.
“குறவர்தம் பெண்டிரொடு
... அயரும் குரவை.”8
குறத்தியருள் கட்டுப்
பார்க்கும் கட்டுவிச்சி மலைகளைப் பாடுவாள்.
______________________________________________
1. திருமுருகாற்றுப்படை,
238-43.
2. குறிஞ்சிப்.
99-101
3. மலைபடு.
329
4. மலைபடு.
302-4
5. மலைபடு. 342.
6. குறுந். 89; 1.
7. கலி. 42; 7-9.
8. மலைபடு.
320-22.
|