New Page 1

18

ஆராய்ச்சி உரை

“அகவல் மகளே அகவல் மகளே
...    ...    ...    ... ...
    இன்னும் பாடுக பாட்டே, அவர்
    நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.”1

    பிறர் வீடுகளுக்குச் சென்று ஐயமேற்றுக் கிடைத்த தானியத்தைப் பலருக்கு ஈவது ஒருவகை விரதம் என்று தெரிகிறது. இதைத் திருமணம் நிகழ்வதற்குமுன் சிறு பெண்கள் மேற்கொள்வார்கள். அவ்வாறு பிறர் வீடு சென்று ஐயமேற்கும் போது அவர்கள் பல பாடல்களைப் பாடுவார்கள்.

"பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ
எய்திய பலர்க்கீத்த பயம்.”2

    சிவராத்திரியிலும் ஸ்ரீஜயந்தியிலும் சிறு குழந்தைகள் எண்ணெய் முதலியவற்றைக் கேட்டுப் பாடும் பாடல்கள் இங்கே நினைவுக்கு வருகின்றன.

பாலை

    பாலை நிலத்தில் வாழும் மக்கள் தம்முடைய தெய்வமாகிய துர்க்கையைப் பரவி வேட்டுவ வரி பாடுவதைச் சிலப்பதிகாரத்தின் வாயிலாக நாம் உணரலாம்.

முல்லை

    முல்லை நிலத்தில் ஆயரும் ஆய்ச்சியரும் வாழ்கின்றனர். அவர்கள் தாம் வழிபடு கடவுளாகிய கண்ணனைப் பரவிக் குரவையாடிப்பாடுகிறார்கள். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை இருக்கிறது.

"குரவை தழீஇயாம் மரபுளிப் பாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்”3

    அவ்வாறு குரவை பாடும்போது ஆயன் ஒருவன் ஏறு தழுவிய சிறப்பையும் பாடுவதுண்டு.

"பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக்
கோடு குறிசெய்த மார்பு.”
4
______________________________________________________

    1. குறுந். 23.                                                
    2. கலி. 59; 16-7.
    3. கலி. 103; 75-6.
    4. கலி. 104; 63-4.