ம
மருதம்
மருத நிலத்தில் ஆடவரும் மகளிரும்
இணைந்து ஆடிப்பாடுவார்கள்.
“... ... ஒலிகொள்
ஆயம்
ததைந்த கோதை தாரொடு
பொலியப்
புணர்ந்துடன் ஆடும் இசையே.”1
மகளிர் தாம் கூடிக்
கைகோத்து ஆடுவதைத் துணங்கை என்பர். அவர்கள் ஆடும்போது அதற்குரிய பாடல்களைப் பாடுவார்கள்.
“நினக்கொத்த நல்லாரை
நெடுநகர்த் தந்துநின்
தமர்பாடும் துணங்கையுள்
அரவம்வந் தெடுப்புமே.”2
“முழவிமிழ் துணங்கை தூங்கும்
விழவின்.”3
நெய்தல்
நெய்தல் நிலத்தில் கேட்கும்
பாடல்களின் ஒலியை ஒருங்கே மதுரைக் காஞ்சி சொல்கிறது. நீரை இறைப்பவர்களின் பாட்டொலி,
ஏற்றம் இரைப்பார் ஓசை, பறவைகளை ஓட்டுகிறவர்களின் பாட்டு, பரதவர் மகளிர் ஆடும் குரவையில்
பாடும் பாட்டு ஆகியவற்றை அங்கே காண்கிறோம்.
“நீர்த்தெவ்வும் நிரைத்தொழுவர்
பாடுசிலம்பும் இசை, ஏற்றத்
தோடுவழங்கும் அகலாம்பியின்
கயனகைய வயல்நிறைக்கும்
மென்தொடை வன்கிழாஅர்
... ... ...
... .... ...
இரும்புள் ஓப்பும் இசையே,
என்றும்
மணிப்பூ முண்டகத்து மணல்மலி
கானல்
பரதவர் மகளிர் குரவையொ
டொலிப்ப.”4
அங்கும் மகளிர் தெய்வத்துக்குரிய
பூசனையை இயற்றி வழிபட்டுப் பாடுகிறார்கள்.
______________________________________________________
1. மதுரைக்.
264-6.
2. கலி 70 : 13-4.
3. அகநானூறு. 336 : 16.
4. மதுரைக். 89-97.
|